ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ்

 


106 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான்.  உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’  என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் பெட்டியை தனியாக பிரித்து அதை போட் மெயிலோடு இணைத்து கொடைக்கானல் பயணத்தை தொடங்குவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட் மெயில் 10.48 மணிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடைவெளியில் ஆஷின் பாதுகாவலன் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றிருந்தான்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான மணித்துளிகள் அவை.   ‘இந்தியன் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான், எப்படி அடித்தாலும் தாங்கிக்கொள்வான்’, என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனைக்கு சாவு மணி அடித்த மணித்துளிகள். 

ஒரு டிப்டாப் ஆசாமி.  நீளமான தனது தலை முடியை மடித்து கட்டியிருந்தார்.  ஏதோ அலுவலகத்திற்கு செல்வது போல உடை.  ஆஷ் இருந்த முதல் வகுப்பு பெட்டியில்  நுழைகிறார்.   அவர் தான் வாஞ்சிநாதன்.  இருபத்தி ஐந்து வயது இளைஞர். கலெக்டர் ஆஷும், அவரது மனைவியும் பெட்டியில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். வாஞ்சியின் கையில் பெல்ஜியம் நாட்டு பிரவுனிங் வகை துப்பாக்கி இருந்தது. ஆஷின் நெஞ்சை குறிபார்த்தது. நிலைமையின் விபரீதத்தை ஆஷ் உணரும் முன் துப்பாக்கி மூன்று முறை வெடித்து ஓய்ந்தது. ஆஷ் தரையில் சரிந்தான்.  மனைவி மேரி அலறினார்.  வாஞ்சி ஓட, பாதுகாவலர் அவரைத் துரத்த அந்த இடமே கலவர பூமியானது.   இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் சென்று உட்புறமாக தாளிட்டுக் கொண்டார் வாஞ்சி.    

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரை வெளியே கொண்டு வர பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பிரயோஜனமில்லை. நீண்ட நேர அமைதிக்குப் பின் கழிவறையிலிருந்து ‘டுமீல்’ என்று ஓசை எதிரொளித்தது. எல்லாமே முடிந்து போனது. வெள்ளைக்காரனின் கையில் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியை வாய்க்குள் சொருகி தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் வாஞ்சி.

அடுத்த நாள் உலகச் செய்திகளில் ஆஷ் படுகொலை முதன்மை இடத்தை பிடித்தது.  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமே இந்தியர்கள் போராடுவார்கள். வெள்ளைக்காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக தனிப்பட்ட முறையில் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று நினைத்திருந்த வெள்ளைக்கார அரசுக்கு இந்த சம்பவம் பேரிடியை ஏற்படுத்தியது.  

யார் இந்த ஆஷ்?

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்கிற ஆஷ் நவம்பர் 23, 1872-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தவர்.  அயர்லாந்தின் தலை நகரான டப்லினில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். 1892 ம் ஆண்டு டிரினிட்டி கல்லூரியில் உயர் படிப்பை தொடங்கினார். 1894ல் நடந்த இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் நாற்பதாவது இடத்தை பிடித்தார். 1895ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.  துணை கலெக்டராக பதவியேற்றார்.  பிறகு படிப்படியாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டாகவும், கலெக்டராகவும் பதவி உயர்வு பெற்றார்.  1907ம் ஆண்டு திருநெல்வேலி கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். என்ன காரணமோ தெரியவில்லை, உடனடியாக பணியில் சேராமல் நீண்ட கால விடுமுறையில் இருந்தார்.  பிறகு பிப்ரவரி 17, 1908 ல் பணியில் சேர்ந்தார். ஏதோ உள்ளுணர்வு அவரை எச்சரித்திருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.    

அந்த நாட்களில் தூத்துக்குடி முக்கியமான துறைமுகம்.  அதோடு மட்டுமின்றி நெசவுக்கும், பவழங்களுக்கும் புகழ் பெற்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த  A&F ஹார்வி என்ற நிறுவனம் இந்த துறைகளை தன் வசம் வைத்திருந்தது.  இதே நிறுவனம்தான் ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’, என்ற நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் கப்பல் வர்த்தகங்களை கவனிப்பது இவர்களின் பணி.  இந்த தொழிலில் இவர்களை எதிர்க்கவோ, போட்டியிடவோ யாரும் இல்லை.  ஒரு ‘தனிக்காட்டு ராஜ்ஜியம்’ என்றே சொல்லலாம்.  

ஆஷுடைய திருநெல்வேலி நாட்கள் அசாதாரணமானவை.   பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இடைவிடாது சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருந்த  மாவட்டம் அது. கர்சனுடைய வங்கப்பிரிவினைக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பிரச்னைகளோடு நகர்ந்தது. நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நலிந்து வந்த வேளையில் தூத்துக்குடியில் மட்டும் வலிமையுடம் வலம் வந்து கொண்டிருந்தது  அதற்கு காரணம் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் காங்கிரஸின் தீவிரவாத பிரிவை சேர்ந்தவர். பாலகங்காதர திலகரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்.  பிரிட்டிஷ் கப்பல் வர்த்தகத்துக்கு போட்டியாக ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.  இரண்டு கப்பல்களை தனது சொந்தப் பணத்தில் வாங்கினார். 

அந்த நாளில் தூத்துக்குடியிலிருந்து இலங்கைச் செல்ல ஆங்கிலேயர் கப்பல்களில் பயணக் கட்டணம் 16 அணா என்று இருந்தது. சுதேசி இயக்கத்தை வளர்க்க வ.உ.சி. தனது கப்பல்களில் இதே பயணத்திற்கு எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்தனர். வ.உ.சியின் இந்த செயல் ஆஷிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சுதேசி இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்தெறிவது என்று முடிவெடுத்தான்.  

சுதேசி கப்பல்களை செயலிழக்க செய்யும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தான். அதன்படி ஆங்கிலேய கப்பல்களில் கட்டணமே இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டான். அதாவது எல்லோருமே ஓசியில் பிரயாணிக்கலாம். எந்த செலவும் இல்லாமல் இலங்கையை அடையலாம். அதோடு நிறுத்தாமல், பயணம் செய்பவர்களுக்கு ஒரு குடையையும் இலவசமாக வழங்கினான்.  ஓசிப் பயணத்திற்கு இலவசம் ஒரு குடை. இலவசங்களும், விலையில்லா பொருட்களும் தன்னையும், தன் நாட்டையும் சேர்த்து அழிக்கவல்லது என்பதை அன்றே நமக்கு உணர்த்தியது இந்த சம்பவம். தன்மானத்தையும், சுதேசி இயக்கங்களையும் புறக்கணித்த மக்கள் ஆங்கிலேய கப்பலில் பயணிக்கத் தொடங்கினர். ஆஷின் திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சுதேசி கப்பல் பயணிக்க ஆளில்லாமல் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் வ.உ.சி. பிற்காலத்தில் வேறுவழியில்லாமல், இரண்டு கப்பல்களும் ஏலத்தில் விடப்பட்டது. அதையும் ஆங்கில அரசே ஏலத்தில் எடுத்தது. 

சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு, 1907ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி கடற்கரையிலும், திருநெல்வேலியிலும் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தினார் வ.உ.சி. அந்தக் கூட்டங்களில் சுப்ரமணியம் சிவாவின் பேச்சு தீப்பொறியை கக்கியது. இது அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய கூட்டங்களை அரசு உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.    

பிப்ரவரி, 27, 1908ம் நாள் தூத்துக்குடியில் ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.  இதை முன்னிருந்து நடத்தியவர் வ.உசி.  அந்த போராட்டத்தை கையாளும் பொறுப்பில் இருந்தவன் ஆஷ்.   நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். வ.உ.சி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது வ.உ.சிக்கு கிடைத்த வெற்றி.  ஆனால், தனிப்பட்ட முறையில் தனக்கு கிடைத்த தோல்வியாகவும், அவமானமாகவும் கருதினான் ஆஷ். வ.உ.சி.யை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்தான்.

இது தெரியாமல் வ.உ.சியின் சுதேசி கூட்டங்கள் வழக்கம் போல நடந்தது. வங்காளத்தை சேர்ந்த பிபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாளை ‘சுதந்திர நாளாக’ கொண்டாட முடிவு செய்தனர் சுதந்திர போராளிகள்.  அதை விரும்பாத அரசு மார்ச் 12, 1908 அன்று வ.உ.சி, பத்ம நாப ஐயங்கார், சுப்ரமணியம் சிவா ஆகியோரை கைது செய்தது. இதைக் கண்டித்து பெரிய ஊர்வலம் நடந்தது. இதைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான் ஆஷ். அதில் நான்கு பேர்கள் இறந்தார்கள். அத்தோடு நிறுத்தாமல், கைது செய்யப்பட்டவர்களை புரட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தினான். இதன்மூலம் வ.உ.சி.க்கு நாற்பதாண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஆஷ் தனது முயற்சியில் வெற்றி பெற்றான்.  

ஆஷினுடைய இந்த செயல் இந்திய போராளிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  

ஆஷ் கொல்லப்படும் போது அவரது மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன்உ டன் இருந்தார் என்று படித்தோம். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்புதான் அவர் அயர்லாந்திலிருந்து வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் 6 ஏப்ரல், 1898-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆஷைவிட மேரி ஒரு வயது மூத்தவர் என்றும், அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆஷ் கொலைக்குப் பிறகு மேரி தனது குழந்தைகளுடன் ஏப்ரல் 1912-ம் ஆண்டு தனது தாய் நாட்டிற்கு திரும்பினார். திருப்தியளிக்கும் வகையில் அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டது. தன் கண் முன்னே கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவருடைய இறுதி மூச்சுவரை அவரிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஆஷின் மூத்த மகன் இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து 1947ம் ஆண்டு ஓய்வு பெற்றான். இரண்டாவது மகன், இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு கொண்டு அதில் உயிரிழந்தான்.  மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021