சர் ஜெ.ஜெ. தாம்சன் (J.J.THOMSAN)
எலக்ட்ரானைக் கண்டுபிடித்த நவீன அணு இயற்பியலின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் ஜெ.ஜெ. தாம்சன் சர் ஜோசப் ஜான் தாம்சன் (Joseph John Thomson) டிசம்பர் 18, 1856ல் இங்கிலாந்தின் மான்செசுடரில் உள்ள சீத்தம் குன்று என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870ல் மான்செசுடரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார். அதன் காரணமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883ல் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ...