மக்களை தேடி தென்காசி காவல்துறை
தென்காசி "மக்களை தேடி தென்காசி காவல்துறை" தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பேட்டி..!!!
"மக்களை தேடி தென்காசி காவல்துறை" தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பேட்டி..!!!
தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர், தென்காசி மாவட்டத்தில் புதிதாக மக்களை தேடி காவல்துறை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் புகார்கள் குறித்து மக்கள் காவல் நிலையத்துக்கு வந்து வெகுநேரம் பேச முடியாது. அதனால் மக்களை தேடி காவல்துறை என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துகிறோம். இத்திட்டத்தின் படி, புகார் கொடுத்தவுடன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர் நேரடியாக புகார்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிப்பார்கள். இது தொடர்பாக உடனடியாக அங்கு வைத்தே சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு அதற்கான எண்ணும் வழங்கப்படும்.
மேலும், புகார்கள் குறித்து காவல் நிலையங்களில் சரியான முடிவு எடுக்காவிட்டால் அல்லது போலீஸ்காரர்கள் சரியான பதில் அளிக்காவிட்டால் மக்கள் தொடர்பு கொள்ள 93856 78039 என்ற தனி செல்போன் எண் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தொலைபேசி எண் போல, இது மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு எண்ணாக செயல்படும். எனது அலுவலத்தில் இதை ஒருவர் கண்காணிப்பார். இதில் மக்கள் தங்கள் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது பற்றி மட்டும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, உங்கள் ஊரில் நடக்கும் பிற பிரச்சினைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். உதாரணமாக மணல் கடத்தல் அல்லது யாராவது குடித்துவிட்டு தகராறு செய்தால் கூட இந்த எண்ணுக்கு நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தென்காசி புதிய மாவட்டம் என்பதால், மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் எடுக்கப்படும்.
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மாவட்ட கலெக்டருடன் இணைந்து அவர் அறிவிக்கும் அறிவிப்புகளையும், மக்களை பாதுகாப்பதில் காவல்துறையினர் ஈடுபடுவோம். மேலும், மாவட்டத்தில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், இதனால் வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்றங்களை குறைக்கவும் முடியும் என்றார்.
முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக