வாஞ்சிநாதன்
வாஞ்சிநாதன் செங்கோட்டையைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். வாஞ்சி, திருவாங்கூர் சாமஸ்தான வனத்துறையில் புனலூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி பொன்னம்மாள். வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.
வ.உ.சிக்கு எதிராக ஆஷ் எடுத்த நடவடிக்கைகள் வாஞ்சியின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இனி பொறுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். தனது சகாக்களுடன் கூடினார். அங்கு ஆஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது. யார் ஆஷை சுடுவது என்றும் விவாதிக்கப்பட்டது. எல்லோரும் நான், நீ என்று போட்டிபோட, இறுதியில் அனைவரின் பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்று முடிவானது. பெயர்கள் தாங்கிய சீட்டுக் குவியலிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த பெயர் ‘வாஞ்சிநாதன்’. வாஞ்சிக்கு மகிழ்ச்சி. அலுவலகத்திற்கு மூன்று மாதங்கள் லீவு எடுத்தார். அனைவரிடமும் விடைபெற்று பாண்டிச்சேரிக்கு ஆயுத பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் சென்ற பின் மற்ற துண்டுச் சீட்டுகளும் பிரித்து பார்க்கப்பட்டதாம். எல்லா சீட்டுகளிலும் தன் பெயரையே வாஞ்சி எழுதி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
பாண்டிச்சேரியில் வி.வி.எஸ். ஐயரை சந்தித்தார். வி.வி.எஸ். ஐயர், பாரத மாதா என்ற அமைப்பை நடத்தி வந்தார். அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார் வாஞ்சி. இது சாவர்க்கரின் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் கிளை. முதலில் புதுச்சேரியிலும், பிறகு பரோடாவிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டார் வாஞ்சி. பிறகு ஊர் திரும்பினார். ஆஷை கொலை செய்ய சரியான தருணத்திற்காக காந்திருந்தார். வாஞ்சியின் செயல்பாடுகள் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. வெறுப்புடன் நாட்களை நகர்த்தி வந்தார்.
இந்த நிலையில் ஜூன் 17, 1911 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்படார் என்றும், ரயில் நிலைய கழிவறையில் மறைந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார் வாஞ்சி என்று படித்தோம். அதே நேரத்தில் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுடும் போது வேட்டியணிந்த மற்றொருவரும் உடன் இருந்தார். அவர் மாடசாமி பிள்ளை. சுதந்திர இந்தியா மறந்து போன மற்றொரு போராளி. வாஞ்சியை மற்றவர்கள் துரத்தும் போது, அந்த குழப்பத்தை உபயோகப்படுத்தி தப்பினார் மாடசாமி பிள்ளை.
வாஞ்சியின் உடலை கைப்பற்றிய காவல்துறை அவரின் சட்டைப் பைகளில் சோதனை செய்தனர். ஒரு இரண்டாம் வகுப்பு பிரயாண டிக்கெட்டும், இரண்டு காகிதங்கள் கிடைத்தது. ஒன்று, பிரான்சிலிருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிக்கையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று அச்சிடப்பட்டிருந்தது. மற்றொன்று காவல்துறைக்கு வாஞ்சி எழுதி வைத்திருந்த கடிதம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இவைதான்.
‘இங்கிலாந்து கயவர்கள் நமது நாட்டை கைப்பற்றி சனாதன தர்மத்தை அழிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் அவர்களை விரட்டியடித்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட அவரவர் பங்கிற்கு முயல்கிறார்கள். ராமன், கிருஷ்ணன், வீர சிவாஜி, குரு கோவிந்த், அர்ஜுனன் போன்றவர்கள் ராஜ்ஜியம் செய்து தர்மத்தை பாதுகாத்தனர். அப்படிப்பட்ட நம் நாட்டில் ஐந்தாம் ஜார்ஜ்க்கு முடி சூட்டி அழகு பார்க்க நினைக்கிறது பிரிட்டிஷ் அரசு. நமது மதராஸிகள் மூவாயிரம் பேர் ஐந்தாம் ஜார்ஜ் இந்திய மண்ணை மிதித்ததும் அவரை கொல்ல சபதம் எடுத்திருக்கிறார்கள். எங்களது எண்ணத்தை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக, எங்கள் கூட்டத்தின் மிகச் சிறியவனாகிய நான் இந்த காரியத்தை செய்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இது போன்ற செயல்களை செய்வதை தங்கள் கடமையாக கருதுகிறார்கள்’ என்று எழுதி ஆங்கிலம் மற்றும் தமிழில் கையொப்பம் இடப்பட்டிருந்தது. வாஞ்சியின் கடிதத்தில் தேதியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஷை கொல்ல சரியான தருணத்தை எதிர்பார்த்து காந்திருந்தார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
இந்தப் படுகொலைக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தேடுதல் வேட்டையை தொடங்கியது அரசு.
காவல்துறை வாஞ்சி நாதனின் இல்லத்தில் சோதனையிட்டனர். நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னாளில் அவர்கள் இருவரும் அப்ரூவராக மாற்றப்பட்டார்கள். அவர்கள் அளித்த தவலின் அடிப்படையில் 16 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தது அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. காவல்துறையின் கொடுமைகளுக்கு பயந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். மீதமுள்ள 14 பேரையும் கைது செய்தது அரசு.
1. நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி)
2. சங்கர கிருஷ்ண ஐயர் (வாஞ்சியின் மைத்துனர்) - விவசாயி
3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை - காய்கறி வியாபாரம்
4. முத்துக்குமாரசாமி பிள்ளை - பானை வியாபாரம்
5. சுப்பையா பிள்ளை - வக்கீல் குமாஸ்தா
6. ஜகனாத அய்யங்கார் - சமையல் தொழில்
7. ஹரிஹர ஐயர் - வியாபாரி
8. பாபு பிள்ளை - விவசாயி
9. தேசிகாச்சாரி - வியாபாரி
10. வேம்பு ஐயர் - சமையல் தொழில்
11. சாவடி அருணாச்சல பிள்ளை - விவசாயம்.
12. அழகப்பா பிள்ளை - விவசாயம்
13. வந்தே மாதரம் சுப்பிரமணி ஐயர் - ஆசிரியர்
14. பிச்சுமணி ஐயர் - சமையல் தொழில்
ஆஷ் கொலை சதித் திட்டத்தில் பங்கிருப்பதாக மேலும் ஐந்து நபர்களின் மேல் சந்தேகப்பட்டது ஆங்கில அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.
1. வி.வி.எஸ். ஐயர்
2. சுப்பரமணிய பாரதி
3. ஸ்ரீனிவாச ஆச்சாரி
4. நாகசாமி ஐயர்
5. மாடசாமி பிள்ளை
இதில் மாடசாமி பிள்ளை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல்கள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் பாண்டிச்சேரியில் தங்கிவிட்டார்கள். பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. அதனால் அவர்களை கண்காணிக்க ஒற்றர்களை நியமித்தது அரசு.
பொதுவாக குற்றாம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்படி ஆஷ் கொலை வழக்கு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. காரணம், கொலை செய்யப்பட்டவர் ஒரு ஆங்கிலேயர், கலெக்டர்.
கைது செய்யப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச். நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனையும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அப்பீல் செய்யப்பட்டது. பிரயோஜனமில்லை. தீர்ப்பு திருத்தப்படவில்லை.
தென் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதலாவதும், கடைசியுமான பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ். மனைவியின் கண் முன்னே கணவன் கொல்லப்படுவது மிகவும் கொடுமையானது. வேறுவழியில்லை, இது காலத்தின் கட்டாயம்.
இந்தியர்களின் அஹிம்சையை கேடயமாக உபயோகித்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு ஒரு வீர தியாகி அளித்த பரிசு மரணம். இந்த பரிசு ஒவ்வொரு இந்தியனுக்கும் வருத்தத்தை கொடுத்தாலும், ஆஷ் என்ற கேன்சர் கட்டிக்கு அஹிம்சை என்ற பச்சிலை மருந்து உதவாது, அறுவை சிகிச்சை மட்டுமே பலனை அளிக்கும் என்பதை புரியவைத்தவர் வாஞ்சிநாதன்.
காயமடைந்த ஆஷ் துரையை அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டு சென்றனர். கங்கைகொண்டான் பகுதிக்கு வந்தபோது ஆஷ் உயிர் பிரிந்தது. அதே சமயம், வாஞ்சியின் உடல் திருநெல்வேலி சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் இரு நாட்கள் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றது. வாஞ்சிநாதனின் இறுதி முடிவு குறித்த பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கான விடை இன்றுவரை கிடைக்கவில்லை. இந்தத் தகவல்களை திரட்டி அதை ஆவணப்படுத்த வேண்டும்.
வாஞ்சியின் செயல்கள் அவரின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்று படித்தோம். வாஞ்சி இறந்துபோனதும், அவருக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை நடத்த அவரின் தந்தை மறுத்துவிட்டார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
2011-ம் வருடம் ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் முடிந்ததை மனத்தில் கொண்டு ஆஷ் குடும்பத்தினர், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு “நடந்ததை மறந்து சமாதானமாக இருப்போம்” என்று கடிதம் எழுதினார்கள். ‘ஆஷின் வாரிசுகள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று பதிலனுப்பியது வாஞ்சிநாதனின் குடும்பம். இதை மனிதநேயம் என்று பாராட்டலாம். ஆனால், 25 வயது இளைஞன் தன்னைச் சுற்றி வளர்ந்திருந்த கனவுக் கோட்டையையும், குடும்பத்தின் கனவையும் கலைத்த நாள் இன்று.

கருத்துகள்
கருத்துரையிடுக