தித்திக்கும் திருநெல்வேலி அல்வாவின் வரலாறு

அல்வா_நெல்லையின்".......🌷

        பழைய நினைவுகள்.....✍️

அல்வாவின் மணத்தை....

       பொறுமையாகப் படித்து சுவையுங்கள்..🙏

********     ********    ********    ********   ********   

திருநெல்வேலி ரயில் நிலையம்......

    #வீராபுரம்_ஜங்ஷன்"....என்று அழைக்கப்பட்டது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்....?

""வீரராகவபுரம்"" கிராமம்தான் 

        அந்தப்பகுதி.🙏

#வீராபுரம் என்றாலேயே முதலில் நினைவுக்கு வருவது இப்போது ""ஸ்மார்ட் சிட்டிக்காக"" இடிக்கப்பட்ட ""சென்ட்ரல்பஸ்ஸாண்ட்""தான்.

 அப்போது வேய்ந்தான்குளம் பஸ்டாண்டெல்லாம் கிடையாது. 

 வண்ணார்ப்பேட்டை புறவழிச்சாலையும் கிடையாது.

 சென்னை, மதுரை, நாகர்கோயில், தென்காசி என்று எங்கே போக வேண்டுமானாலும் வீராபுரம் பஸ்டாண்டு வந்தாக வேண்டும்.

 எப்போதும் ஜகஜோதியாக ஜேஜே என்று இருக்கும். மாலை 5 மணிக்கு மேல் சென்னைப் பேருந்துகள் சாரைசாரையாய் கிளம்பும். 

 திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் 180 UD புதுவசந்தம் என்று வண்டியின் பெயர், மாலை 6.30 க்கு நெல்லையில் கிளம்பி  அடுத்த நாள் காலை 6 மணிக்கு சென்னை நுழைந்துவிடும். கனமாக எப்போதும் புன்சிரிப்போடிருக்கும் கண்ணன் அண்ணாச்சி வண்டியை எடுத்தால் எங்களுக்குக் குஷி.

       கோவில்பட்டி கற்பகத்தில் 7.50 க்கு    

       வண்டியை நிறுத்துவார். 

       நாலு புரோட்டா ஒரு டீ அடிப்பார். 

       வண்டி முன் நின்று தம்மடித்து விட்டு            

       உள்ளே உள்ள தகரப்பெட்டியைத் திறந்து     

       வாட்ஸ் அதிகமுள்ள ஹேலஜன் பல்பை     

       எடுத்து வண்டியில் மாட்டுவார்.

       ஒரே அழுத்துதான் வண்டி பறக்கும். 

அந்த வேகம் இன்றுள்ள ஆமினி பேருந்து ஓட்டு நர்களிடம் கூட கிடையாது. அந்தப் பிளாட்பாமைக் கடக்கும்போது அவர் நினைவு வந்துவிட்டது.

களக்காடு செல்லும் கணபதி பஸ் வீராபுரம் பஸ்டாண்டில் நுழையும்போதெல்லாம் பழைய நினைவுகள் பீறிட்டெழும். 

இருக்கவே இருக்கு அசத்தும் பேருந்துகள். பயோனியர், டி.வி.எஸ்.,  லயன் பஸ், ஸ்ரீ ராம்பாப்புலர், கேவி.வி. ஆண்ட்ரூஸ், சீதாபதி என வரிசையாய் வண்டிகள் உள்ளே வருவதும் வண்டி எடுக்கும் நேரப் பிரச்சனை திருநெல்வேலி பாஷையில் அர்ச்சனையாய் எதிரொலிக்கும். 

 மறுநாள் எல்லாவற்றையும் மறந்து விட்டு  உள்ளே உள்ள கிராஜுவேட் டீ ஸ்டாலில் காபி சாப்பிடுவார்கள். NCBH எதிரே உள்ள பிள்ளையார் கோவிலும் அதற்கு முன் சீசன் துண்டு விரித்து அட்டைப் பெட்டி யைக் கவிழ்த்து அதன் மீது வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வியாரிபாரிகளும் என்றும் நினைவில். டாக்சி நிற்கும் இடத்திற்கு இடையே #ஸ்டுடன்ஸ்புக்சென்டர் உண்டு. அங்கேதான் பேப்பர் நோட்புக் வாங்குவோம்.

 சென்னை பஸ் கிளம்புமிடத்தில் #செல்வன்சவுண்ட்ஸ் அலுவலகமும் முக்குக் கடையில் எல்லா நாளிதழ்களும் வார மாத இதழ்களும் கிடைக்கும். 

பயணிகள் அமர வட்ட வட்டமாகச் சிவப்பு நிறத் திண்டுகள் இருக்கும். நாலு மணிக்கெல்லாம் தினமலர், தினகரன், தினத்தந்தி பேப்பர் பார்சல்கள் கணபதி பஸ் அருகே வந்துவிடும்.

 நெற்றியில் பட்டையடித்துச் சந்தனம் குங்குமத்தோடு வண்டியில் பத்தி பொருத்திவைத்து டிரைவர்கள் சீட்டில் ஏறி அமர்ந்து விடுவார்கள்.

 பேருந்து நிலையத்திற்குள்ளிருந்த அரசனில் தேங்காய் பன் டீ சாப்பிட்டு வெளியூர் கிளம்புவதுண்டு. 

 வெளியூர் போனால் திருநெல்வேலி அல்வா கேட்பார்கள் என்பதால் சுடலைமாடன் பீடத்திற்கு எதிரேயுள்ள ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்சில்  அல்வா நாலு கால் வாங்குவதுண்டு.  

செயின்ட் மேரிஸ் மெடிக்கலிலும் அப்போது கூட்டம் அலைமோதும். சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா நெல்லைக்காரர்களுக்குப் பிடித்தமானது. 

அதுசரி நெல்லைக்கு அல்வா எப்படிடா வந்தது என்று சேக்காளி பாலா ஒருமுறை கேட்டான். நெல்லை மாவட்டத்தில் உள்ள #சொக்கம்பட்டிஜமீன்தார் வடமாநிலங்களுக்குப் புனித யாத்திரை போய்விட்டு ராஜஸ்தான் போயிருக்கிறார். போன இடத்தில் சேட்ஜி செய்துதந்த அல்வாவில் சொக்கிப்போனார். அப்போது அங்கே பஞ்சம். நீங்கள் நெல்லை வருகிறீர்களா என்று அவர்களை அழைக்க அவர்களும் சம்மதித்து நெல்லை வந்திருக்கிறார்கள். அவர் ஜமீனில் நிறைய குதிரைகள் இருந்ததால் அவற்றைப் பராமரித்து கோதுமைப் பால் தந்து காக்கப் பணித்துள்ளார். அவர்கள் குடும்பம் லாலா குடும்பம் என்று அழைக்கப்பட்டது. அதில்  உள்ள லட்சுமிபாய் பிரேமா பாய் இருவரும் ராஜஸ்தான் பாணியில் அல்வா கிண்டுவதில் வல்லவர்கள். அவர்களிடம் #ஹரிசிங் கற்றுக்கொண்டு முதலில் கடைபோட்ட இடம் சாலைக்குமார சாமி கோவில் எதிரே சந்திரா ஸ்வீட்ஸ்க்கு அருகில் இன்றும் இருக்கும் #லட்சுமிஸ்வீட்ஸ் " தொடங்கினார். அப்போது ஈரடுக்கு மேம்பாலமெல்லாம் கிடையாது. பேட்டை மில்லுக்கு வேலைக்குப் போய்விட்டு வரும் போது ஐம்பது அல்வா சாப்பிட்டுவிட்டு பாலும் அருந்திச்செல்வார்களாம். அக்கடையே நெல்லையில் ரயில் நிலையம் செல்லும் வழியில் முக்குக் கடையாக உள்ள லக்ஷ்மி ஸ்வீட்ஸ் என்றும் மதுரையில் அது பிரேமா விலாஸ் லாலா மிட்டாய்க்கடை என்றும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியில் ஹரி அண்ணன் சொன்னதாய் நினைவு. 

 இப்போது ஊரைச் சுற்றி முப்பது நாற்பது சாந்தி தித்திப்பகங்கள் வந்து ஒரிஜனல் சாந்தியின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

  அப்போது சாந்தியில் அல்வாவை வாழையிலையில் கட்டி அதன்மேல் கனத்த காக்கிக் காகிதத்தில் பொதிந்து தருவார்கள்.

 பாலீதின் கண்டராவியெல்லாம் பின்னால் வந்தது.

 சிந்துபூந்துறை போகும் வழியில் சாந்தி ஸ்விட்ஸ் அல்வா இன்னும் சுவையாக இருக்கும் என்பான் சேக்காளி குமரேசன்.

 அவன் அப்போது சிந்துபூந்துறையில் குடியிருந்தான்.

 #இருட்டுக்கடை_அல்வாவில் ஒரு முந்திரிப் பருப்பு கூட இருக்காது. சினிமாப் பாட்டில் வேறு வந்துவிட்டதாலும் டிமாண்ட் ஏற்படுத்தி  நேரக் கட்டுப்பாட்டுக்குள் விற்பதாலும் வெளியூர்க் காரர்களுக்கு இருட்டுக்கடை எப்போதும் கிரேஸ் தான். என்றாவது டவுண் பாரதியார் தெரு வழியே நடந்து அம்மன் சன்னிதிக்குச் சென்றிருக்கிறீர்களா? அல்வா வாசம் நாசியைத் தூக்கும். பிறகென்ன? 

இருட்டுக் கடை அல்வா முறுகலாக  இருக்கும்.

 சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு எதிரே நாள் முழுக்க மூடிக் கிடக்கும் இருட்டுக் கடை முன் அன்று முதல் இன்று வரை அதே கூட்டம் இருக்கிறது. வடமாநில சுற்றுப் பயணம் செய்த நெல்லை ஜமீன்தார் ராஜஸ்தான் போக அங்கே அவர் உண்ட அல்வாவில் மயங்கி, அதைச் செய்தவர்களைத் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து அல்வா செய்து தரச் சொல்லி அப்போது டவுனுக்கு வந்தவர்தான் பிஜிலி சிங் என்ற இனிப்பு வரலாறு அல்வாவுக்கு உண்டு.  இந்தியாவின் எல்லா இடங்களிலும் கோதுமைப் பாலெடுத்து சீனி போட்டுப் பதமாக்கி முந்திரிப் பருப்பெல்லாம் போட்டுதான் அல்வா செய்கிறார்கள். ஆனால் திருநெல்வேலி அல்வா சுவை ஏன் வருவதில்லை என்றால் தாமிரபரணி தண்ணீரில் அவை செய்யப்படுவதில்லை என்பது தான்.  

சரியாக ஆறு மணிக்கு கடை திறக்கும், நாற்பது வாட்ஸ் முட்டை பல்பு எரியத் தொடங்கும். நானும் பாலாவும் ஐம்பது அல்வா வாங்குவோம்.

 சதுரமாய் கத்திரித்த இந்து பேப்பரில் வாழையிலை வைத்து  கத்தியால் அல்வாவை நறுக்கிச் சொத்தென்று போடுவார்.

 சாப்பிட்டுவிட்டு காரத்திற்குக் கை நீட்டுவோம். 

"இருட்டுக் கடை அடைத்திருக்கும் நேரத்தில் அதே வரிசையில் பத்துகடை தள்ளி விசாகம் ஸ்வீட்ஸ் இருக்கிறது மக்கா அதுவும் அவங்க கடைதான் என்பான் சேக்காளி. ஆச்சர்யம் அவன் சொன்னது போல் இருட்டுக் கடையில் உள்ள அதே பிஜிலி சிங் படம் விசாகத்திலும் உள்ளது எனவே அங்கே கூட வாங்கலாமென்றான். அன்றிலிருந்து கூட்டத்தில் நிற்பதில்லை, அங்கே வாங்கிச் செல்வோம்.

 இருட்டுக் கடை அல்வா நாள் செல்லச் செல்ல சுவை கூடும். 

சாந்தி ஸ்வீட்ஸ் பால் அல்வா மாலை 7.30 க்கு வரும். வண்டியிலிருந்து இறக்கப்படும் முன் காலியாகிவிடும். வரிசையிலிருந்து வாங்குவோம். சாந்தியில் எப்போதும் கூட்டம் அலைமோதும் என்பதால் சாந்திக்கு எதிரேயுள்ள லெட்சுமி ஸ்வீட்ஸில் ஸ்பெஷல் அல்வா வாங்கிச் செல்வோம்.

பாளையில் ஸ்ரீ ராம் ஸ்விட்ஸ் அல்வா எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும். கருப்பட்டி அல்வா,நெய் அல்வா, கேரட் அல்வா, முந்திரி அல்வா , பேரீச்சம்பழம் அல்வா, ரோஜாப்பூ அல்வா, பீட்ரூட் அல்வா என்று பல சுவைகளில் ஸ்ரீ ராம் ஓனர் வாராவாரம் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

 மிக்கர் வாங்கப் போனவர்கள் கையில் அன்றைய ஸ்பெஷலை ஒரு துண்டு சுவைக்கத் தருவார். 

வாங்கப் போனதை மறந்துவிட்டு அவர் தந்த அல்வாவை வாங்கி வருவோம்.

 மஸ்கோத் அல்வா அப்போதுதான் அறிமுகமாகி மார்க்கெட் கண்ணன் ஸ்வீட்ஸில் கிடைத்தது.

 சாலைக்குமாரசாமி கோவிலுக்கு எதிரேயுள்ள #சந்திராஸ்வீட்ஸ் அல்வா இன்னொரு சுவை.

 எங்கள் அம்மம்மா காமாட்சிப் பாட்டி பொன்னமராவதியில் 75 வயது வரை இருந்தார். 

லீவுக்கு ஊருக்குப் போனால் திரும்பிவரும்போது தூய நெய்யூற்றி அல்வா கிண்டித் தருவார். 

முந்தைய நாள் ஆளாளுக்கு கோதுமையை நனையப் போட்டு    கையால் அரைப்போம். பால் எடுத்து மறுநாள் பாட்டி செய்து தரும் அல்வாவைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.  

அல்வா மட்டுமா?

#ஜானகிராம_ஹோட்டல்""  ரவா தோசை பில்டர் காபிக்கு நாங்கள் 35 ஆண்டுகளாக ரசிகர்கள். 

நானும் சென்னை  ஹோட்டல்கள் உட்படப் பல இடங்களில் ரவா தோசை சாப்பிட்டிருக்கிறேன்.

 ஜானகிராமை அடிக்க இன்னும் ஆள்வரவில்லை. 

காபி சாப்பிட்டு வெளியே வந்து பஸ் ஏறும் வரை அதன் இனிப்பு கலந்த கசப்பில் ஏதோ ஒரு மயக்கம் இன்னும் இருக்கிறது.

 கடந்த ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக தினத்தந்தியின் நாலாம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக் கட்டுரையை ஜானகிராம் உணவகத்தின் பாலீதின் ஒழிப்பு முயற்சியைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். உரிமையாளர் Ram Kumar சார்வாள் அக்கட்டுரையைக் கலர் ஜெராக்ஸ் எடுத்து உணவகத்தின் எல்லாத் தளங்களிலும் ஒட்டியிருந்தார்.

 ஜானகிராமின் கருப்பட்டி அல்வா அப்போதே ஊரறிந்தது.

பஸ்ஸாண்டிலிருந்து திலி ரயில் நிலையம் செல்லும் பாதையும் கடைகளும் நினைக்க நினைக்க நெஞ்சூறும். சென்டரல் கபே அப்போது பெயரோடு விளங்கியது. அதற்கு அருகில் சிவாஜி ஸ்டோர்ஸ் காற்று ஊதும் தலையணையிலிருந்து சோப்பு சீப் வரை எல்லாம் கிடைக்கும். அதற்கடுத்து நறுமணப் பொருட்கள் விற்கும் கடை, அதற்கு எதிரே பத்மா புக் ஸ்டால், சியாமளா புக் ஸ்டால், பிறகு அனில் ஸ்டோர் வந்தது. முக்குக் கடையில் அன்றிலிருந்து இன்றுவரை காபியும் டீயும் பேமஸ்தான். மாடியில் ராஜஸ்தான் ஹோட்டல் அப்போதே உண்டு. 

ஹிந்தி பாடல்கள் கடையில் வழியும். அப்போதே பாவ்ஜியும், சோன்பப்டியும், சோளா பூரியும், டாலும் எண்ணெய் இல்லாத சப்பாத்தியும் அங்கே கிடைக்கும்.

 நெல்லை வாழ் சேட்ஜிக்களின் உணவுக் கூடம். 

இரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பிள்ளையார் கோவிலில் காலையும் மாலையும் விநாயகர் அகவலும் கந்தகுரு கவசமும் தவறாது ஒலிக்கும்.

 ஹெட்போஸ்ட் ஆபிஸ்களில் மாலை 5.20 க்கு மேல் கட்டு எடுப்பதில்லை. அப்போது கூரியரெல்லாம் பேமஸாகவில்லை.

 RMS தான். அஞ்சல் கவரைத் தந்து எடை பார்ப்போம். லேட் பீ எவ்வளவென்று சொல்வார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில் நிலைய வாசலில் உள்ள அஞ்சல் பெட்டியிலிருந்து எடுத்து உடனுக்குடன் வரும் ரயில்வண்டிகளில் RMS மூலம்  அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள். 

கூட்டம் ஏதுமின்றி அமைதியாக இருக்கும் RMS அஞ்சலகத்தில் கத்தை கத்தையாய் அஞ்சலட்டைகளும் இன்லேண்ட் கடிதங்களும் அஞ்சல்தலைகளும் வாங்குவோம். சென்னையைப் போன்றோ மதுரையைப் போன்றோ அதிக பரபரப்பில்லாதது திருநெல்வேலி இரயில் நிலையம். 

நெல்லை எக்ஸ்பிரஸ் மட்டுமே இங்கிருந்து கிளம்பும் வண்டி என்பதால் முதல் பிளாட்பார்ம் அதற்குத் தான். 

அப்போது VIP நுழைவாயிலெல்லாம் கிடையாது. 

ஒரு வண்டிக்கும் இன்னொரு வண்டிக்கும் இடையே அரைமணி நேர இடைவெளி இருந்ததால் கூட்டம் தங்காது.

 அப்போது உள்ளே புத்தகக் கடைகள் உண்டு. தள்ளுவண்டியில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகள், திருநெல்வேலி அல்வா விற்பார்கள்.

 ரயில்நிலையத்திற்கு வெளியே உள்ள காமராஜர் சிலை கம்பீரமாக இருக்கும்.

 தினத்தந்தி நாளிதழ் நிர்வாகம் அச்சிலையைப் பராமரிக்கிறது. சென்னைக்குப் போனால் அதன் பரபரப்பும் வேக ஓட்டத்திற்கும் நெல்லையர்களால் ஈடுகொடுக்க முடியாது. இரண்டே நாளில் நம்மூருக்கு என்று திரும்புவோம் என மனம் தேட ஆரம்பிக்கும். கங்கை கொண்டான் தாண்டி தாழையூத்து நுழையும்போதே இரயில்பெட்டியின் கதவைத் திறந்து நம்மூரை எட்டிப் பார்க்கும் ஆவல் வந்துவிடும். வண்டி பாலபாக்யா நகர் பைபாஸ் ரயில்வே பாலத்திற்குள் நுழையும் போதே நம் மனம் த.மு. கட்டடம் (தங்க முகமது கனி  பில்டங்) அருகே ஓடிச் சென்றுகொண்டிருக்கும்.

#நன்றி....        ## வளரும்......##

முனைவர் #செளந்தர_மகாதேவன்

தமிழ்த்துறைத்தலைவர்,

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,

திருநெல்வேலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021