திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு :
பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. ( மற்ற நான்கு ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர் ).
திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட ஆண்டு :
தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தின் சிறப்புகள் :
ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலமாக விளங்குகிறது.
ஐம்பூதத் தலங்களில் திருவாரூர் பிருதிவித்தலமாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்.
ஏழு விடங்கர் தலத்தில் மற்ற தலங்கள் சூழ நடுவில் உள்ளது திருவாரூர்.
திருவாரூர் இருப்பிடத் தகவல்கள் :
திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும்.
திருவாரூர் மாவட்டத்தின் பரப்பரளவு 2161 சதுர கி.மீ ஆகும்.
மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,165,213 ஆகும்.
ஆண்களின் எண்ணிக்கை 578,870 ஆகும்.
பெண்களின் எண்ணிக்கை 586,343 ஆகும்.
இம்மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் 76.90மூ ஆகும்.
வருவாய்கோட்டங்கள்:
மன்னார்குடி
திருவாரூர்
வருவாய் வட்டங்கள்
மன்னார்குடி
திருவாரூர்
வலங்கைமான்
குடவாசல்
நன்னிலம்
நீடாமங்கலம்
திருத்துறைப்பூண்டி
நகராட்சிகள்
மன்னார்குடி
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
கூத்தாநல்லு}ர்
ஊராட்சி ஒன்றியங்கள்
மன்னார்குடி
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
வலங்கைமான்
குடவாசல்
நன்னிலம்
நீடாமங்கலம்
கொரடாச்சேரி
முத்துப்பேட்டை
கோட்டூர்
பேரூராட்சிகள்
வலங்கைமான்
குடவாசல்
நன்னிலம்
நீடாமங்கலம்
கொரடாச்சேரி
பேரளம்
முத்துப்பேட்டை
மாவட்ட முக்கிய பிரமுகர்கள்:
மனுநீதிசோழன், தியாகய்யர், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்திரி, திருவாரூர் நடேச நாயனக்காரர், திருமருகல் டி.வி.நமச்சிவாயம், வலங்கை சண்முகசுந்தரம் முதலிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், திரு.வி.க., ஏ.டி.பன்னீர் செல்வம், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதிமங்கலம் ஆரூரான், சக்கர ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, கே.பாலசந்தர், நெடுஞ்செழியன் முதலியோர் இம்மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆவர்.
திருவாவூர் மாவட்டத்தின் கோயிற் சிறப்புகள்:
தியாகராசர் கோயில்:
இவ்வூர்த் தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.
′′கோயில் ஐந்து வேலி
குளம் ஐந்து வேலி
ஓடை ஐந்து வேலி′′ என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். ( ஐந்து வேலி - 1000 அடி நீளம் 700 அடி அகலம்) இத்தலத்தின் கோயில், கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர் மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி பரப்புடையது.
முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நு}ற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.
63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும். இவ்வாலயம் கோயில்களின் கூடாரம். 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோயில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.
இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்.
64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.
திருவாரூர்த் தேர்:
திருவாரூர்த் தேரழகு என்றும் திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான் என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆΝ என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நு}ற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நு}ற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.
தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ஆழித்தேர் என்று அழைக்கின்றனர். ஆழி என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.
தேரின் அமைப்பு:
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.
இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.
திருக்கோளிலி:
திருவாரூர் அருகில் உள்ள இவ்வூர் ஒரு சப்த விடங்கத் தலம். தேவாரம் பாடல்பெற்ற தலமுமாகும். இங்கு நவக்கிரகங்கள் ஒரு தீங்கும் செய்ய இயலாதவாறு கோணமின்றி ஒரே திசையில் நேரே வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேதான் இவ்வூர் திருக்கோளிலி என அழைக்கப்படுகிறது. திருக்கோளிலி என்ற பெயர் திருக்குவளை என மருவி இன்று திருக்குவளை என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் ராஜராஜச் சோழன், மூன்றாம் இராஜராஜச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன. இங்குள்ள கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது.
திருவிற்குடி:
சிவபெருமானுக்குப் பின்னால் வி\;ணு வடிவம் இருப்பது இங்குள்ள கோயிலின் சிறப்பு. சிவபெருமானின் எட்டு வீரத் தலங்களுள் இவ்வூர் ஒன்று.
கோட்டூர்:
தேவாரமும், திருவிசைப்பாவாலும் பாடப்பெற்ற 2 கோயில்கள் இவ்வூரில் உள்ளது. சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வூர் வள்ளல் அரங்கசாமி முதலியார் 200 வேலி நிலமும், 12 இலட்சம் ரூபாயையும் அறச் செயலுக்காக எழுதி வைத்தார்.
எண்கண்:
புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இவ்வூரும் ஒன்று. இங்குள்ள கோயிலுக்கு அழகான மதில் சுவர்கள் உள்ளன. இத்தகைய மதில்களை இந்நாளில் அமைக்க 100 கோடி ரூபாய் கொட்டினாலும் கட்ட முடியாது என்பர்.


கருத்துகள்
கருத்துரையிடுக