ஆன்லைனில் கல்வியா? யூடியூப்பில் வருமானமா?..
*கொரோனா காரணமாக இணைய வழியில் பாடம் நடத்திவரும் பள்ளி ஆசிரியர்கள் யூடியூப் தளத்தில் வருமானம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.*
*கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவல் நிலையை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன.*
*இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தங்களின் வகுப்பின்பாட காணொலிகளை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வருமானம் பெறும் நபர்களாக ஆசிரியர்கள் மாறி வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.*
*மாணவர்களை இணைய வழியில் நேரடியாக சந்திக்காமல் தங்களது யூடியூப் விடியோக்களின் இணைப்புகளை ஆசிரியர்கள் அனுப்புவதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் தடைபடுவதாக தெரிவிக்கும் கல்வியாளர்கள் ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.*
*அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விதிகளுக்கு மாறாக இதுபோன்ற வழிகளில் வருமானம் ஈட்டுவது தடுக்கப்பட வேண்டிய சூழலில், மாணவர்களை கவனிக்க வேண்டிய நேரத்தை யூடியூப் விடியோக்களை தயாரிக்க ஆசிரியர்கள் செலவிடுவதாக புகார்களும் எழுந்து வருகின்றன.*
*மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என அரசு கல்வித் தொலைக்காட்சியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் பொறுப்பற்ற முறையில் தங்களது வருமானத்திற்காக யூடியூப் சேனல்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பது உடனடியாக கலையப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பமாக உள்ளது.*

கருத்துகள்
கருத்துரையிடுக