தேவநேயப் பாவாணர்
பெயர் : தேவநேயப் பாவாணர்
இயற்பெயர் : தேவநேயன்
பிறப்பு : 07-02-1902
இறப்பு : 15-01-1981
பெற்றோர் : ஞானமுத்து தேவேந்தரனார், பரிபூரணம் அம்மையார்
இடம் : சங்கர நயினார் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு
புத்தகங்கள் : தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை, இலக்கணவுரை வழுக்கள், உரிச்சொல் விளக்கம், தமிழும் திரவிடமும் சமமா?, திராவிடம் என்பதே தீது, மொழி பெயர்முறை, நிகழ்கால வினைவடிவம், இசைத்தமிழ்க் கலம்பகம், இசையரங்கு இன்னிசைக் கோவை, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
வகித்த பதவி : தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
தேவநேயப் பாவாணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும், செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும், நான்காவது மகனாகவும் பிறந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை கிறித்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
அவர்களைக் கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். 1906 - பாவாணரின் தந்தையாரும், அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் ‘யங்’ துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார்.
தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது.

கருத்துகள்
கருத்துரையிடுக