ஆன்மிகம் என்பதன் புரிதல்
ஆன்மிகம் என்பது ஏதோ குடும்ப கடமைகளை எல்லாம் முடித்து விட்டு வயதான காலத்தில் வாழும் வாழ்வு என்றே பெரும்பாலோர் நினைத்துக்கொண்டு இருக்கினறனர்.
*ஆன்மிகம் என்பது வாழ்வியல் ஆகும்*. எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதே ஆன்மிகம் ஆகும். அதை வாழ்ந்து முடித்தபின் வயதான காலத்தில் தெரிந்து என்ன செய்வது.
ஆன்மிகம் என்பது எங்கோ இருக்கும் கடவுளை பற்றியதோ எங்கும் பரவி நிற்கும் இயற்கை பற்றியதோ எல்லாம் கிடையாது. *அது முழுக்க முழுக்க உங்களைப்பற்றியது*. உங்களைப் பற்றியும், உங்களின் உள்ளார்ந்த இயக்கங்கள் பற்றியும், அதற்கு ஆதாரமான இயக்க சக்தி பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் விஞ்ஞானமே ஆன்மிகம்.
உங்களின் எண்ணங்கள் என்பது என்ன?.
எண்ணங்கள் எப்படி உருவாகிறது.?
மனம் என்பது என்ன.?
அதன் செயல்பாடுகள் என்ன.?
அந்த மனசக்தியை எப்படி தன்னை உணர்தலுக்கு பயன்படுத்துவது.?
மனதின் பதிவுகளாகிய உணர்ச்சிகளை எப்படி கையாள்வது?
அறிவு என்றால் என்ன?
அதை எப்படி கையாள்வது.?
ஒவ்வொரு செயல்களின் மூலம் தொடரும் வினைப்பயன்கள் என்ன?
அதை எப்படி இல்லாமல் செய்வது.?
இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்து செயல்படும் நீங்கள் என்பது எது அதில் எப்படி நிலைபெறுவது.?
அதை எப்படி உணர்வது.?
*உங்களுக்குள் சென்று உங்களையே அக்கு அக்காக பிரித்து ஆராயும் அறிவியலுக்கு பெயர் தான் ஆன்மிகம்*. உங்களுக்குள் இயங்கும் செயல்கள் அனைத்தையும் சரியாக கையாள தெரிந்து அதன் இயக்க சக்தியில் நிலை பெற்று நீங்கள் நீங்களாக இருப்பதுவே ஆன்மிகம். இதுவே ஆன்மிகத்திற்கான நேரடி வழி. மற்றும் விளக்கம்.
இதை உங்களை உணர வைக்கவே கடவுள் என்றும், சொர்க்கம் என்றும் ஞானம் என்றும் பிறவிச்சுழலில் இருந்து விடுபட வேண்டும் என்றும் பலவிதமான மனமயக்கங்களை கொடுத்தும் ஆசை வார்த்தைகளை காட்டியும் உங்களை எல்லாம் ஆன்மிகத்தின் பேரில் ஓட வைத்தும் தேட வைத்தும் வாழ வைத்தும் கொண்டு இருக்கின்றனர்.
நீங்களும் எதையோ தேடி அலைந்து அதை அடைய போவதாகவும், உங்களுக்கு ஏதோ பெரிய புதையல் கிடைக்க போவதாகவும் நினைத்து அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
*நீங்கள் தேடும் புதையல் நீங்கள் தான்*. அதை உணர எங்கும் ஓட வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே அதை செய்ய முடியும்.

கருத்துகள்
கருத்துரையிடுக