காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, சென்னை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் பேசிய அவர், புதிதாக காவல்துறையில் சேர்ந்து பணியாற்றவுள்ள 86 பயிற்சி துணை கண்காணிப்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது;-
“தீயதை பொசுக்கும் தீயாகவும், அனைவருக்கும் பொதுவான வானமாகவும் இருக்க வேண்டும். குற்றங்களுக்குத் தண்டனை பெற்று தரும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
அதிகரித்து வரும் பாலியல் மற்றும் நிதி சார்ந்த சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழக காவல்துறையிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்.
உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கம். தமிழகத்தில் தான் முதன் முதலாக காவல்துறை கணிணிமயமாக்கப்பட்டது. காவல்துறையின் விருப்பங்களை திமுக அரசு நிறைவேற்றும்.”
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக