முத்துலட்சுமி ரெட்டி (Muthulakshmi Reddy)

 


பெயர் : முத்துலட்சுமி ரெட்டி

பிறப்பு : 30-07-1886

இறப்பு : 22-07-1968

பெற்றோர் : நாராயணசாமி, சந்திரம்மாள்

இடம் : புதுக்கோட்டை, தமிழ்நாடு

வகித்த பதவி : மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர்

விருதுகள் : பத்ம பூஷன்



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.


பிறப்பு:


இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.


சொந்த வாழ்க்கை:


திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.


தமிழ்ப் பணிகள்:


இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.


சமூகப்பணி:


1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார். 


இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை. அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி. சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.


விருதுகள்: 


முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.


மறைவு:


முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021