நண்பர்கள் தினம்: 30.07.2021




அக நக நட்பது நட்பு

அக நக நட்பது நட்பு: நண்பர்கள் தினம்!


எல்லா நாட்களிலும் நாம் நமக்கு உதவுபவர்களுக்கும், சிறந்த அறிஞர்களுக்கும், சமூகத்துக்குத் தொண்டு செய்தவர்களுக்கும் நன்றி செலுத்திக் கொண்டு இருக்கிறோம். சிறந்த கருத்துகளையும் தத்துவங்களையும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.


இருப்பினும், தேச அளவிலும், சர்வதேச அளவிலும் சில சிறப்பு தினங்கள் அனுசரிக்கப்படும் போது, அந்தக் கருத்துக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. அந்த வகையில் நண்பர்கள் தினம் மிக நெகிழ்ச்சியுடன் அனைவராலும் கொண்டாடப்படும் ஓர் நாளாகும்.


நம் வாழ்வில் நண்பர்களுக்கான இடம் மிகவும் முக்கியமானது, உன்னதமானது.


தினம் தோறும் நாம் நட்பைப் பேணி வளர்க்கிறோம். நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு முன்னின்று, தேவையான உதவிகள் செய்து, கூடவே இருந்து மகிழ்கிறோம்.


ஆனாலும், நண்பர்கள் தினம் என்று ஒரு நாள் தேச அளவில், உலக அளவில் அனுசரிக்கப்படும் போது, உற்சாக உணர்வு தொத்திக் கொள்கிறது.


எல்லா நண்பர்களாலும் எப்போதும் கூடவே இருக்க முடிவதில்லை. தங்கள் நட்பைக் கொண்டாட , “நண்பர்கள் தினம்” ஒரு வாய்ப்பாக அமைகிறது.


நண்பர்கள் தினம் தோன்றிய வரலாறு   

வாழ்த்து அட்டை தயாரிக்கும் சங்கத்தவர்கள், “நண்பர்கள் தினம்”  கொண்டாடுவதை 1920 ல் முன்னிறுத்தினர். பயனாளர்கள், இது ஒரு வணிக யுக்தி என விமரிசித்து அந்த முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.


லேண்ட்மார்க் வாழ்த்து அட்டைநிறுவனர் ஜாய்ஸ் ஹால், 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் நண்பர்கள் தினமாக கொண்டாடுவதை முன்னிறுத்தினார். சில வருடங்கள் ’நண்பர்கள் தினம்’ வாழ்த்து அட்டை பரிமாறிக் கொள்வது, விடுமுறைக் கொண்டாட்டமாக மகிழ்வது எனச் சிறப்பாக அமைந்தது. 1940 களில், வாழ்த்து அட்டை பரிமாற்றமும் குறைந்தது. நண்பர்கள் தினக் கொண்டாட்டமும் தேய்ந்து நின்று போனது.


உலக நண்பர்கள் தினம் பற்றிய கருத்து, 1958 ஆம் ஆண்டு, பராகுவே நாட்டில், ஒரு நண்பர்களின் சந்திப்பு நிகழ்வில், டாக்டர் ரமோன் அவர்களால் முன்மொழியப்பட்டது.


 உலக நட்பு அறப்போராட்டம் ( world friendship crusade) எனும் அமைப்பும் அப்போது துவங்கப் பட்டது. மதம், மொழி, இனம், நாடு கடந்த புரிதலுடன் கூடிய நட்புணர்வு உலகளாவிய இயக்கமாக மாற வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அப்போது முதல், பராகுவே நாட்டில் ஜூலை 30ம் நாள் “நண்பர்கள் தினம்” அனுசரிக்கப்படுகிறது.


உலகின் பல நாடுகளிலும், நண்பர்கள் தினம் கொண்டாடும் வழக்கம் துவங்கியது.வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


1998ஆம் ஆண்டில், ஐ.நா சபையின் அப்போதைய பொதுச்செயலாளர் கோஃப்டி அமனின் மனைவியார், “வின்னி த பூ” ( Winnie the Pooh )என்ற வால்ட் டிஸ்னி கதாபாத்திரத்தை நட்புக்கான சின்னமாக அறிவித்தார்.


2011 ஆம் ஆண்டு, ஐ.நா பொது சபை ஜூலை 30ம் நாளை “நண்பர்கள் தினம்” என அறிவித்தது.உறுப்பு நாடுகள் ஜூலை 30ம் நாளை அவரவர் கலை பண்பாட்டுக்கேற்ப நட்பு தினமாக கொண்டாடி, நட்பின் சிறப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கம்.


சர்வ தேச நட்பு தினம் ஜூலை 30. இருப்பினும், நண்பர்கள் தினம் வேறு தினங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே முதலிய நாடுகளில், 20 ஜூலையிலும், இந்தியா, மலேசியா,பங்களாதேஷ், அமெரிகா முதலிய நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்றும்மெக்ஸிகோ,ஃபின்லேண்ட், வெனிசுலா முதலிய நாடுகளில் ஃபிப்ரவரி 14ம் நாள் அன்றும் “நண்பர்கள் தினம்” கொண்டாடப்படுகிறது.


கொண்டாட்டம் தான் ! நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே கொண்டாட்டம் தான் ! நண்பர்கள் தினம் என்றால், களை கட்டாதா ?


பூங்கொத்துகள், வாழ்த்து அட்டைகள், சிறப்பு பரிசுகள், விருந்து, கேளிக்கை என நண்பர்கள் தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


நம் நாட்டில், நட்புக் கங்கணம், ராக்கி போன்று கையில் கட்டுவது பழக்கமாக இருக்கிறது.


இந்த வருடம், பல நிகழ்வுகளைப் போல நண்பர்கள் தினமும் மெய்நிகர் நிகழ்வாக ( virtual ) அனுசரிக்கப்படுகிறது.


பாரதத்தில் நட்பு மற்றும் 

நண்பர்கள் தினம்

ஸ்ரீராமபிரானின் நட்பு பாராட்டும் தெய்விக குணத்தை “குகனுடன் ஐவரானோம்” எனும் வார்த்தைகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது.


துரியோதனனுக்கும் கர்ணனுக்குமான நட்பு இன்றளவும் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.


தமிழ் இலக்கியத்தில், பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கு இடையிலான நட்பை நட்புக்கு இலக்கணமாகவே கருதுகின்றனர்.


குசேலருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையிலான நட்பு இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.


குசேலர் என அறியப்படும் சுதாமா, ஸ்ரீகிருஷ்ணருடன் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவர்.


ஏழ்மை நிலையில் உழன்ற குசேலரிடம் அவரது மனைவி, நண்பர் கிருஷ்ணரைப் பார்த்து ஏதேனும் உதவி பெற்று வரச் சொல்லுகிறார்.


துவாரகாபுரி மன்னன் கிருஷ்ணனைப் பார்க்க ஏழை நண்பன் எடுத்துச் சென்றது கொஞ்சம் அவலும் வெல்லமும் தான் !


அதை அன்பாக உண்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் ! தான் வந்த காரியத்தை மறந்து எந்த உதவியும் கேட்காமல் திருப்பி விட்டார் குசேலர்!


பொன்னும், பொருளும் தானியமும் குசேலர் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணன் அருளால் நிரம்பி வழிகிறது !


குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்த நாள் மார்கழி மாதத்தில் முதல் புதன் கிழமை !


மார்கழி மாதம் முதல் புதன் கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. அன்பர்கள் அவலும் அச்சு வெல்லக்கட்டியும் கொணர்ந்து பகவானை வணங்குகிறார்கள்.


குசேலர் தினம் கூட நண்பர்கள் தினம் தானே !


நட்பு வட்டமும் நட்பு ஆராய்தலும்

தொலை தொடர்பு வசதி இல்லாத நாட்களில் நட்பு வட்டம் சிறியதாகத்தான் இருந்தது. நண்பர்கள் முகம் பார்த்துப் பேசி பழகினர்.


அந்நாளைய நட்பில் உறுதித்தன்மையும் நேர்மையும் இருந்தது. எவரது நேர்மையிலோ ஒழுக்கத்திலோ சந்தேகம் இருந்தால், உடனடியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. நட்பு பெரும்பாலும் நன்மை சேர்ப்பதாக, வாழ்வுக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது.


தொலைதொடர்பு வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் வலைதள நட்புகள் அதிகம். தொடர்பாளர்களையும் ,ஒத்த பயனாளர்களையும் “நண்பர்கள்’ எனும் போர்வைக்குள் திணித்துக் கொள்ளும் அபாயத்தில் உள்ளோம் !


பெரும்பாலான வலைதள நட்புகளின் குணாதிசயங்களோ உண்மை நிலையோ தெரியாமலே “நண்பர்கள்” என அடையாளம் தந்துவிடுகிறோம் ! இளைஞர்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது !


நட்பாரய்தல்  பற்றி இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன.


”ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாந் துயரம் தரும்.” – என்கிறது திருக்குறள்.


அதன் பொருள் : பலவகையில் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அதனால் இறுதியில் தான் சாகற்கேதுவாகிய துன்பம் உண்டாகும்.


”தெளிவிலார் நட்பின் பகை நன்று ”  ( அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது ) என்று சொல்கிறதுநாலடியார்.


நட்புணர்வு பகைமையை அழிக்க வல்லது. உறவை மேம்படுத்தி வாழ்வை வளமாக்குவது.


நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், நலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும்.


வலைதளத் தொடர்புகளை, கவனமாகக் கையாளுவோம் !

நட்பின் திறன் உயர்த்தி,நல்ல நண்பர்களாகத் திகழ்வோம் !

நல்ல நட்பைப் போற்றுவோம் ! நண்பர் தின நல் வாழ்த்துகள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021