வாகன பதிவில் BH என்ற புதிய பதிவு எண் அறிமுகம்.
புதுடில்லி: வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச்' எனத் துவங்கும் பதிவு எண்ணை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச் - பாரத் தொடர்' (BH - Bharat series) எனத் துவங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
*யார் யாருக்கு பயன்?*
இந்த அறிவிப்பின்படி, பிஎச் வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும்.
இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக