எம். எஸ். சுப்புலட்சுமி (M.S.SUBBULAKSHMI)
பெயர் : எம். எஸ். சுப்புலட்சுமி
பிறப்பு : 19-09-1916
இறப்பு : 11-12-2004
பெற்றோர் : சுப்பிரமணிய அய்யர், சண்முகவடிவு அம்மாள்
இடம் : மதுரை, தமிழ்நாடு
வகித்த பதவி : பாடகர், திரைப்பட நடிகர்
விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, பாரத ரத்னா விருது, இந்திரா காந்தி விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 புரட்டாசி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணிய அய்யர் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார்.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்’ எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும்.
எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி, என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை ‘சேவாசதனம்’ படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ‘ஆதரவற்றவர்க்கெல்லாம்’ என்ற ஜோன்புரி இராகப்பாடலும், ‘இஹபரமெனுமிரு’ என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். ‘பக்த மீரா’ எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’, ‘கிரிதர கோபாலா’, ‘எனது உள்ளமே’ போன்ற பாடல்கள் பிரபலமானவை ஆகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக