பேராசிரியர் சி. இலக்குவனார் (C.LAKKUVANAR)



பெயர் : பேராசிரியர் சி. இலக்குவனார்

இயற்பெயர் : இலட்சுமணன்

பிறப்பு : 17-11-1909

இறப்பு : 03-09-1973

பெற்றோர் : சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி

இடம் : வாய்மைமேடு, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு

புத்தகங்கள் : எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933), மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்), துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்), தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்), என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972), அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949), அம்மூவனார் (ஆராய்ச்சி)

வகித்த பதவி : தமிழ்  பேராசிரியர்



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


பேராசிரியர் சி. இலக்குவனார், திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும், ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர் - இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.


பேராசிரியர் சி. இலக்குவனார், தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.


வாழ்க்கை குறிப்பு


இவர், வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை, இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், ‘இலக்குவன்’ என மாற்றச் செய்தார். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.


திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936 ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின், அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார்.


இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய ‘சங்க இலக்கியம்’ வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தார். வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு குறள்நெறி என்னும் இதழை 15.1.1964 ஆம் நாள் சி. இலக்குவனார் தொடங்கினார். Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.


இவர், முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


இவர், நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார். மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021