ப்ரீபெய்ட் சிம் பயனர்களுக்கான மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தை மாற்றிய ஏர்டெல் : காரணம் என்ன?




உலக அளவில் கடல் கடந்து வசிப்பவர்களையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ள உதவுகிறது தொலைத்தொடர்பு சாதனங்கள். அதில் மிக முக்கியமான பணியை செய்து வருவது டெலிகாம் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் கொடுக்கின்ற சிம் கார்டுகளை வைத்துதான் நாம் அனைவரையும் தொடர்பு கொள்கிறோம். 


தற்போது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ‘ஏர்டெல் இந்தியா’ தனது ப்ரீபெய்ட் கட்டண விவகாரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த மாற்றங்கள் அந்நிறுவனத்தின் பயனர்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது. அது என்ன மாற்றம்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் குறித்து பார்ப்போம். 


இந்திய டெலிகாம் நிறுவனங்கள்!


இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல், ஜியோ, வி மாறும் BSNL (அரசு நிறுவனம்) என நான்கு டெலிகாம் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதற்கு முன்னர் இருந்த சில நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் தங்களது நிறுவனத்தை இணைத்து விட்டு சென்றுள்ளன. 


ஜியோவின் வருகை!


ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு புரட்சி பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் வரையில் போன் அழைப்புகள், SMS மற்றும் டேட்டா இணைப்புக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஜியோவின் வருகைக்கு பிறகு இவையனைத்தும் ஒரே பேக்கில் அடங்கிவிட்டது. இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றின. 


இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஜியோ நிறுவனத்தை நாடிச் சென்றனர். குறிப்பாக இந்தியாவில் பரவலாக மக்கள் பயன்படுத்தி வரும் போன்களில் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் ஆப்ஷன் இருக்கும். அதனால் இரண்டாவது சிம் ஆப்ஷனாக ஜியோ நுழைந்தது. டேட்டா, அன்லிமிடட் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 SMS என பயனர்களை அந்நிறுவனம் கவர்ந்தது. அதன் காரணமாக இரண்டாவது ஆப்ஷன் முதல் இடம் நோக்கி நகர்ந்தது. 


ஜியோவுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு தங்கள் போனில் உள்ள மற்றொரு சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யும் வழக்கத்தை பயனர்கள் மெல்ல தவிர்க்க தொடங்கினர். ‘தேவை இருந்தால் தானே ரீசார்ஜ் செய்ய முடியும்’ என்பது மக்கள் குரல். அதே நேரத்தில் அந்த சிம் கார்டுகள் மூலம் இன்கம்மிங் அழைப்புகளை பெற்று வந்தனர். அந்த போக்கு மற்ற நிறுவனங்களின் வணிகத்தை பாதிக்க, புது திட்டத்தை 2018 வாக்கில் கொண்டு வந்தது. 


இன்கம்மிங் அழைப்புகளை பெறவே கட்டாயம் ரீசார்ஜ் செய்தாக வேண்டும் என தங்கள் பயனர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. இதில் இரண்டு அஜெண்டா அந்த நிறுவனங்களுக்கு இருந்தன. ஒன்று பயனர்கள் ஜியோவை தவிர்த்துவிட்டு தங்கள் நிறுவன சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வைப்பது. இல்லையெனில் குறைந்தபட்சம் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ய வைப்பது. அந்த திட்டம் நன்றாகவே வொர்க் அவுட்டாகியது.


அப்போது அறிமுகமான குறைந்தபட்ச வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் தான் 28 நாள் வேலிடிட்டி கொண்ட 35 ரூபாய் பிளான். இந்த இரண்டு பிளானும் ஏர்டெல் மற்றும் வி (அப்போது வோடாபோன் மற்றும் ஐடியா) நிறுவனத்தில் அறிமுகமானது. 28 நாட்களுக்கு பிறகு பேலன்ஸ் இருந்தாலும் அதை வைத்து அழைப்புகளை செய்ய இயலாது.  


“ஒவ்வொரு சிம் கார்டுக்கும் சம்மந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் மற்ற டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் டவர்களை ஷேர் செய்வது, அழைப்புகளை இணைக்க பயன்படுத்துவது மாதிரியான காரணத்தினால் ஆண்டுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 20 ரூபாயாவது செலவு செய்ய வேண்டியிருக்கும். வருமானமே இல்லாமல் செலவு மட்டும் செய்து வந்தால் அந்த நிறுவனம் திவாலாகி விட வாய்ப்புகள் இருப்பதனால் தான் இந்த கட்டாய ரீசார்ஜ் நடைமுறை வந்துள்ளது” என டெலிகாம் துறை சார்ந்து இயங்கி வருபவர்கள் சொல்கின்றனர். அதற்கு முன்னர் வரை ப்ரீபெய்ட் பயனர்களுக்கு  லைஃப் டைம் வேலிடிட்டி இருந்தது.


அரசு நிறுவனமான BSNL நிறுவனத்தில் எப்படி?  


ஆரம்பத்திலிருந்தே அரசு நிறுவனமான BSNL லைஃப் டைம் வேலிடிட்டியை கொடுக்கவில்லை. தற்போது தமிழ்நாடு சரக்கிளை பொறுத்தவரையில் இரண்டு மாத இன்கம்மிங் வேலிடிட்டியை BSNL பயனர் பெற குறைந்தபட்சம் 75 ரூபாய் ரீசார்ஜ் செய்தாக வேண்டும். 


தற்போது ஏர்டெல் மேற்கொண்டுள்ள மாற்றம் என்ன?


ஏர்டெல் தற்போது தங்கள் பயனர்கள் குறைந்தபட்சம் 79 ரூபாய் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்தாக வேண்டும் என கட்டணத்தை மாற்றி உள்ளது. இதன் அவுட்-கோயிங் வேலிடிட்டி 28 நாட்கள். கூடுதலாக 7 நாட்கள் இன்கம்மிங் கிடைக்கும். அதன் பிறகு இன்கம்மிங் அழைப்புகளும் துண்டிக்கப்படும். இந்த ரீசார்ஜை செய்தால் 64 ரூபாய் டாக் டைம் பேலன்ஸ் கிடைக்கும். நொடிக்கு ஒரு பைசா இதற்கு கால் கட்டணம். இதில் SMS அனுப்ப இயலாது. காரணம் பயனர்கள் மொபைல் நெம்பர் போர்டபிளிட்டி ஆப்ஷனை பயன்படுத்தி வேறு நிறுவனத்திற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக. SMS அனுப்ப வேண்டுமென்றால் பயனர் 129 அல்லது 149 பிளான் ரீசார்ஜ் செய்தாக வேண்டும் என ஏர்டெல் செக் வைத்துள்ளது. இந்த SMS கட்டுப்பாட்டை ‘வி’ நிறுவனமும் கடைபிடிக்கிறது. ஆனால் அந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் 49. முன்பிருந்த 35 ரூபாய் பிளானை அப்படியே 49 என மாற்றியது. 


ஏர்டெல் நிறுவனத்திலும் இந்த 49 வேலிடிட்டி பிளான் இருந்தது. தற்போது அதை தான் நீக்கியுள்ளது. இந்த பிளான் தவிர வாய்ஸ் + டேட்டா + SMS அன்லிமிடெட் பிளான்களில் ஏர்டெல் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பயனர்களை அன்லிமிடட் பிளான்கள் பக்கமாக இந்த நடவடிக்கையை ஏர்டெல் கடைபிடித்திருக்க கூடும் என சொல்லப்படுகிறது. 


கொரோனா சூழலிலும் டெலிகாம் நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கி வருவதாக சில ரிப்போர்டுகள் சொல்கின்றன. இந்நிலையில் இந்த கடினமான சூழலில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனம் இப்படி கட்டணத்தை மாற்றியுள்ளது சங்கடமே. ஏர்டெல் செய்துள்ளதை வேறு சில டெலிகாம் நிறுவனமும் கடைபிடிக்க வாய்ப்புள்ளது. 


ஜியோ நிறுவனத்தில் ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் 149 ரூபாய். ஜியோ போன் பயனர்களுக்கு குறைந்தபட்சம் 75 ரூபாய் ரீசார்ஜ் என தற்போது உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021