டி.எம். சௌந்தரராஜன் (T.M.SOUNDARAJAN)
பெயர் : டி.எம். சௌந்தரராஜன்
பிறப்பு : 24-03-1922
இறப்பு : 25-05-2013
பெற்றோர் : தொ.அ. மீனாட்சி ஐயங்கார்
இடம் : மதுரை, சென்னை மாகாணம், தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா
வகித்த பதவி : திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்
விருதுகள் : பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார்.
பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்களை பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.
சிறப்புகள்
‘டி.எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்க்கும்பாடியுள்ளார். 2010ல் கோவையில் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான "செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற பாடலை டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்.
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய "முத்தைத் திருபத்தித் திருநகை" எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழை அடைந்தது. இவர் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஶ்ரீ’ மற்றும் தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ஆகிய விருதுகளைப் பெற்றார். டி. எம். சௌந்தரராஜன் அவர்கள், இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு சென்னையில் காலமானார்.
கருத்துகள்
கருத்துரையிடுக