நெல்சன் மண்டேலா (NELSON MANDELA)




பெயர் : நெல்சன் மண்டேலா

இயற்பெயர் : நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா

பிறப்பு : 18/07/1918

இறப்பு : 05/12/2013

இடம் : தென்னாப்பிரிக்கா

வகித்த பதவி : தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்

விருதுகள் : பாரத ரத்னா, நேரு சமாதான விருது, உலக அமைதிக்கான நோபல் பரிசு



வரலாறு:-நெல்சன் மண்டேலா...!!

👉 நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.


👉 நெல்சன் மண்டேலாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள் மற்றும் 13 பிள்ளைகள் இருந்தனர். அதில் மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் நெல்சன் மண்டேலா.


👉 இவரது இயற்பெயர் நெல்சன் ரோலிஹ்லா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன் என்பது இவர் கல்வி பயிலும்போது அவரது பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும்.


👉 நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். அப்போதே போர் புரியும் கலைகளையும் பயின்றார்.


👉 நெல்சன் மண்டேலா இளம்பருவத்தில், ஒரு குத்துச்சண்டை வீரர். 'குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துச்சண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை' என்று அவர் தனது சுயசரிதையான 'சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடைபயணம்' (லாங் வாக் டு ப்ரீடம்) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.


👉 சிறுவயது முதலே வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளை கண்டு வளர்ந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த கடினமான ஒன்றாகத்தான் இருந்தது.


👉 சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதை பார்த்து வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனதில் பதிந்தது.


👉 கல்வியறிவை பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட நெல்சன் மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.


👉 Fort Hare - பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக, அவர் அந்த கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.


👉 கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. அதன்பின்னர் 1941ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார்.


திருமண வாழ்க்கை :


👉 நெல்சன் மண்டேலா, 1944ஆம் ஆண்டு 'ஈவ்லின் மேஸ்' என்ற செவிலியரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தை தொடங்கினார்.


👉 1956ல், நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் ஈடுபட்டதால், மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


👉 அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. நெல்சன் மண்டேலா மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியது. ஐந்தாண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டு இருந்தது.


👉 இந்த விசாரணையின்போது, நெல்சன் மண்டேலா 'வின்னி மடிக்கிஸெலா' என்ற சமூக சேவகியை சந்தித்தார். இவர்களின் நட்பு இரண்டு ஆண்டுகள் நீடித்தது.


👉 அதன் பின்னர், நெல்சன் மண்டேலா 1958ஆம் ஆண்டு தனது முதல் மனைவி, ஈவ்லின் மேஸை விவாகரத்து செய்தார். அதே ஆண்டு வின்னியும், நெல்சன் மண்டேலாவும் திருமணம் செய்து கொண்டனர். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். அதனால் இருவரும் மாறி மாறி சிறைவாசத்தில் இருந்ததால் அவர்களால் குடும்ப வாழ்க்கையை பெரிதாக அனுபவிக்க முடியவில்லை.


👉 நெல்சன் மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும், 2வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் பிறந்தனர்.


நெல்சன் மண்டேலாவின் போராட்டங்கள் :


👉 தென்னாப்பிரிக்காவில் அதிகமான மக்கள் கருப்பர் இன மக்களே!! ஆனால், அங்கு வெள்ளையர்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்.


👉 மேலும், கருப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. வாக்குரிமை தடை, பயணம் செய்ய தடை, நில உரிமை தடை உட்பட பல தடைகள் கருப்பினர்களின் மீது திணிக்கப்பட்டிருந்தது.


👉 நெல்சன் மண்டேலா சிறுவயது முதலே கருப்பின மக்கள் படும் அவஸ்தையை நேரில் கண்டதால், இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க எண்ணினார். தனது 21வது வயதில் கருப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து போராட தொடங்கினார்.


👉 1948ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு கருப்பின மக்களுக்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.


👉 நெல்சன் மண்டேலாவும், அவரின் பல்கலைக்கழக தோழரும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கருப்பின மக்களுக்காக சட்ட ஆலேசானைகளை வழங்கினர். 


👉 கருப்பின மக்களிடம், அவர்களது முடக்கப்பட்ட உரிமைகளுக்காக போராட விழிப்புணர்வை ஊட்டி அறைகூவல் விடுத்தார்.


👉 இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதை கண்ட வெள்ளையர் அரசு 1956ல் அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலையானார்.


👉 சிறையில் இருந்து வெளிவந்த நெல்சன் மண்டேலா விடுதலைக்காக தீவிரமாக செயல்பட்டார். அதன்பின் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது.


👉 நெல்சன் மண்டேலா, ஆப்பிரிக்கர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அதில் போலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டார்கள்.


👉 இதன் பின்னணியாக 1956ஆம் ஆண்டில் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களுக்காக நெல்சன் மண்டேலாவும் அவரின் தோழர்களும் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1960ல் அனைவரும் இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


👉 சிறைவாசத்துக்கு பிறகு நெல்சன் மண்டேலாவின் விடுதலை போராட்ட செயல்கள் தீவிரமானது. அறப்போரின் மூலம் போராடி உரிமைகளை பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்ததாக ஆயுத வழிமுறையை நாடினார்.


👉 1961ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் ஆயுதப்படையை உருவாக்கி அதன் தலைவராக உருவெடுத்தார்.


👉 முழுமையான விடுதலையை கோரி இவரது போராட்டங்கள் வெள்ளையர் அரசின் அஸ்திவாரத்தை தாக்க துவங்கியது. ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுக்க தொடங்கிய நெல்சன் மண்டேலாவின் அதிரடி தாக்குதல்கள் அங்கிருந்த வீர இளைஞர்களை வீறு கொண்டு எழச்செய்தன. இதனால் நெல்சன் மண்டேலாவை கைது செய்ய வெள்ளையர் அரசு முடிவு செய்தது.


👉 வெளிநாடுகளில் உள்ள நண்பர்களிடமிருந்து பணம் மற்றும் ராணுவ உதவிகளை பெற்று, மரபுசாரா கொரில்லா போர்முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினார். இதனால் தென்னாப்பிரிக்க தேசமே விடுதலை தீப்பற்றி கொண்டு எரிந்தது.


👉 இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் நெல்சன் மண்டேலா தலைமையில் 1961ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதனால் வெள்ளையர் அரசு நெல்சன் மண்டேலாவை கைது செய்ய கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக நெல்சன் மண்டேலா தலைமறைவானார்.


👉 இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை காரணம் காட்டி அமெரிக்கா இவரை பயங்கரவாதியாக முத்திரை குத்தியது. நெல்சன் மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.


👉 1962ஆம் ஆண்டு இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறுவேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அரசால் திட்டமிட்டபடி நெல்சன் மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.


நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கை :


👉 அரசுக்கு எதிராக புரட்சி செய்தது, அமைதியை குலைத்தது, கலகத்தை உருவாக்கியது, தென்னாப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றது என நெல்சன் மண்டேலாவின்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதனால் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.


👉 கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய வயது 46. ஒரு வருடம் அல்ல, இரு வருடம் அல்ல, 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


👉 உலக வரலாற்றிலேயே நெல்சன் மண்டேலாவை போல் நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் யாரும் இல்லை.


👉 பல ஆண்டுகளாக அவரை தனிமை சிறையிலேயே அடைத்து வைத்து கொடுமை செய்தது வெள்ளையின அரசு. அவரை மற்றவர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஏன்? அவரது மனைவியை கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.


👉 இவருக்கு சிறையில் இருக்கும்போது 1988ஆம் ஆண்டு கடுமையான காசநோய் ஏற்பட்டு, மரணத்தின் விழும்பிற்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.


👉 நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதிலுமிருந்து எழுந்தது. ஆனால், அப்போது தென்னாப்பிரிக்க ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா என்பவர் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். 


👉 நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி அவரது மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.


👉 இதனால் 'நெல்சன் மண்டேலா எங்களிடம் மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்' என்று தென்னாப்பிரிக்கா அரசு கூறியது. ஆனால், நெல்சன் மண்டேலா இதற்கு இணங்க மறுத்துவிட்டார். அவரது மனவுறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட வைத்தது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021