மார்க்கோனி (MARCONI)

 


பெயர் : மார்க்கோனி

இயற்பெயர் : குலீல்மோ மார்க்கோனி

பிறப்பு : 25-04-1874

இறப்பு : 20/07/1937

பெற்றோர் : கைசப் மார்க்கோனி, ஆனி ஜேம்சன்

இடம் : இத்தாலி

வகித்த பதவி : கண்டுபிடிப்பாளர்

விருதுகள் : இயற்பியலுக்கான நோபல் பரிசு



வரலாறு:-மார்க்கோனி

👉1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியில் குலீல்மோ மார்க்கோனி பிறந்தார். இவரின் தந்தை கைசப் மார்க்கோனி, தாயார் ஆனி ஜேம்சன் அயர்லாந்தை சேர்ந்தவர் ஆவார்.


👉இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையை பெற்றார். போலோக்னா, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.


👉இளமைப்பருவத்தில் இவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் குழந்தைப்பருவ பொழுதுபோக்கு ஆகும். சிறுவயதிலேயே மார்க்கோனிக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது.


👉மார்க்கோனிக்கு அல்போன்சோ என்ற ஒரு சகோதரரும், லூய்கியும் என்ற மாற்றாந்தாய் சகோதரரும் இருந்தனர்.


👉மார்க்கோனி குழந்தையாக இருக்கும்போது முறையான கல்வி கற்க பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் உயர்கல்வியும் பயிலவில்லை. அதற்கு பதிலாக, பெற்றோரால் பணியமர்த்தப்பட்ட தனியார் ஆசிரியர்களிடமிருந்து வீட்டில் வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.


👉லிவோர்னோவில் (Livorno) உயர்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியரான பேராசிரியர் வின்சென்சோ ரோசா, மார்க்கோனிக்கு முக்கியமான வழிகாட்டியாக இருந்தார் என மார்க்கோனி குறிப்பிட்டுள்ளார். ரோசா 17 வயதான மார்க்கோனிக்கு உடல் நிகழ்வுகளின் அடிப்படைகளையும், மின்சாரம் குறித்த புதிய கோட்பாடுகளையும் கற்பித்தார்.


👉18வது வயதில் மார்க்கோனி போலோக்னா பல்கலைக்கழக இயற்பியலாளர் அகஸ்டோ ரிகியுடன் அறிமுகமானார். மேலும், அவர் ஹென்ரிச் ஹெர்ட்ஸின் (Heinrich Hertz) பணிகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.


👉பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளில் கலந்து கொள்ளவும், பல்கலைக்கழகத்தின் ஆய்வகம் மற்றும் நூலகத்தைப் பயன்படுத்தவும் மார்க்கோனிக்கு ரிகி அனுமதி அளித்தார்.


👉அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துக்களையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.


வானொலியின் தந்தை.. மார்க்கோனி :


👉மார்க்கோனி, எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார்.


👉மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகளை பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


👉அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது, டெலிகிராஃப் (wireless telegraphy) அனுப்பும் முறையை உருவாக்கினார்.


👉மேலும், வானொலி அலைகளை கொண்டு கம்பியில்லா தந்தி முறையை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை.


👉1895ஆம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்கு செய்தியை அனுப்பக்கூடிய திசைதிரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவியின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.


👉 அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரையை கேட்டு 1896ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றார். இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சரியத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது.


👉 ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.


👉 பல தொடர் ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1897ஆம் ஆண்டு மோர்ஸ் அலை வடிவை 6கி.மீ தூர அளவுக்கு செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார்.


👉1897ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி, மார்க்கோனி திறந்த கடல் வழியாக முதல் வயர்லெஸ் தகவல்தொடர்பை அனுப்பினார்.


👉பிரிஸ்டல் சேனலில் பிளாட் ஹோல்ம் தீவிலிருந்து பெனார்தில் உள்ள லாவர்நாக் பாயிண்டிற்கு 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அந்த செய்தி 'நீங்கள் தயாரா?' என்று படித்தது.


👉கடத்தும் கருவிகள் உடனடியாக சோமர்செட் கடற்கரையில் உள்ள ப்ரீன் டவுன் கோட்டைக்கு மாற்றப்பட்டன. இதன் வரம்பை 16 கிலோமீட்டர் (9.9 மைல்) வரை நீட்டித்தது.


👉ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்து பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்து பார்த்தார்.


👉பல சோதனைகளுக்கு பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார்.


👉இவற்றை கவனித்த இத்தாலி அரசாங்கம், அதன்பிறகுதான் மார்க்கோனியின் மீது கவனத்தை செலுத்தியது. அதன் விளைவாக மார்க்கோனி பிறந்த மண்ணில் 1897ல் லாஸ்பீசியா என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளை செய்து காண்பித்தார்.


👉அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து அனுப்பிய செய்தி சுமார் 20.கி.மீக்கு அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது.


👉இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த பொதுமக்களிடையே கம்பியில்லா தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் 1896ல் டிசம்பர் 11ஆம் தேதி டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார்.


👉பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1897ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்து காட்டினார்.


👉1899ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத்தொடர்பு நிலையங்களை உருவாக்கினார்.


👉இவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை, போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்தி பயன்படுத்த தொடங்கியது. அதன்மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது.


பல உயிர்களை காத்த மார்க்கோனி :


👉1898ல் கிழக்கு காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது.


👉உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலி சாதனத்தின் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையை குறித்த செய்தியை பரப்பினர்.


👉அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகளின் மூலம் அவர்களைக் காப்பாற்றினர். அதன்பிறகு வர்த்தக கப்பல்கள், போர்க்கப்பல்கள் பலர் மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.


👉1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி.


👉வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்றாலும் கூடப்போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால், உலகின் உருண்டை வடிவத்திற்கும், வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி.


👉அன்றைய தினம் Newfoundland-ன் St.John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.


👉2100 மைல் தொலைவிற்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


👉தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன.


👉உலகின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனையின் மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி.


மார்க்கோனியின்.. திருமண வாழ்க்கை :


👉1905ல் மார்க்கோனி பீட்ரைஸ் ஓ'பிரையன் (O'Brien) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். அதன்பின் மார்க்கோனியும், பீட்ரைஸ் ஓ'பிரையனும் 1924ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.


👉ஜூன் 12, 1927ஆம் ஆண்டு மார்க்கோனி, மரியா கிறிஸ்டினா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மரியா எலெட்ரா எலெனா அண்ணா (Maria Elettra Elena Anna) பிறந்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021