குன்றக்குடி அடிகளார் (KUNDRAKUDI ADIKALAAR)
பெயர் :
குன்றக்குடி அடிகளார்
இயற்பெயர்
: அரங்கநாதன்
பிறப்பு
: 11-07-1925
இறப்பு
: 15-04-1995
பெற்றோர்
: சீனிவாசப் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
இடம் : தஞ்சை, தமிழ்நாடு
புத்தகங்கள்
: ஆலய சமுதாய மையங்கள்
வகித்த பதவி : இலக்கியவாதி
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
‘அடிகளார்’ என்பது
துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல்.
எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி
அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப்
பெயரானது தனி வரலாறு.
தமிழகத்துத்
தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள
திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப்
பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை
11ஆம் தேதி பிறந்தார். இவருக்குப்
பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.
அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர்
இருவர்; சகோதரி ஒருவர். பள்ளி
இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர
ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை
அறிந்து 1944ஆம் ஆண்டு அப்பணியில்
சேர்ந்தான். 1945 - 48 கால இடைவெளியில் முறைப்படி
தமிழ் கற்று வித்துவான் ஆனதும்
அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த
தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய
சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.
1945ஆம்
ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத்
தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித்
தம்பிரான், சமயம் தொடர்பான பல
பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர்
தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில்
பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு
ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன
இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார். அப்போது தெய்வசிகாமணி ‘அருணாசல
தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‘ என்ற திருப்பெயரும் அவருக்குச்
சூட்டப்பட்டது.
1949ஆம்
ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆதீன
இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16ஆம் தேதி
முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது
குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால்,
அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய,
‘குன்றக்குடி அடிகளார்’ என்று மக்களால் சிறப்புடன்
அழைக்கப்பட்டார். தவத்திரு அடிகளார் ஆதீனப்
பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு
மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப்
பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம்
ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை
மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப,
இந்து மதத்தின் உன்னத சீலங்களைப்
புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11ஆம் தேதி
சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில்
ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை
நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே ‘அருள்நெறித் திருக்கூட்டம்’.
1954 ஜூலை
10ஆம் தேதி இதன் முதல்
மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில்
நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு
செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது,
இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக ‘அருள்நெறித்
திருப்பணி மன்றம்’ எனும் அமைப்பும் 1955 ஜூன்
10ஆம் தேதி கிளைத்தது. அப்போதைய
தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு
‘தெய்வீகப் பேரவை’ எனும் அமைப்பு, 1966இல்
முகிழ்த்தது. தருமை ஆதீன குருமகா
சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று
அரும்பணிகள் பல ஆற்றினார்.
பேச்சுக்கு
நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம்
வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு,
மணிமொழி, தமிழகம் அருளோசை முதலிய
இதழ்களையும் நடத்தினார். அவர் தோற்றுவித்து, இன்றளவும்
வந்துகொண்டிருக்கும் ‘மக்கள் சிந்தனை’யும், ‘அறிக அறிவியல்’ இதழும்
குறிப்பிடத்தக்கன. தமது சமய, சமுதாயப்
பணிகள் மூலம் உலகை வலம்வந்த
மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம். வெளிநாடுகள்
பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார்.
அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள்,
அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின்
வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர்
1972இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான்
‘குன்றக்குடி கிராமத்திட்டம்’.
திருக்குறளின்
ஆழத்தையும், அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில்
தனித்தன்மை கொண்டமைவன. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர்
காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு
வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள்
பேசுகிறது, குறள்நூறுஆகியன அடிகளார் அருளிய திருக்குறள்
தொடர்பான நூல்களாகும்.
சமய இலக்கியத்திற்கு அடிகளார் அளித்த கொடைகளாக
அமைவன, அப்பர் விருந்து, அப்பர்
சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத்தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், நாயன்மார்
அடிச்சுவட்டில் உள்ளிட்ட நூல்களாகும். ஆலய
சமுதாய மையங்கள் என்னும் நூல்,
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற
நூல். அந்த வரிசையில் வைத்துப்
போற்றத்தக்க நூல், ‘நமது நிலையில்
சமயம் சமுதாயம்’.
சமரச சமய நெறியாளர்களுக்கு உரிய
ஆன்மிக இலக்கியமாக அடிகளார் அருளிய ‘திருவருட்சிந்தனை’. நாள் வழிபாட்டுக்குரிய ‘தினசரி தியான நூல்’.
பெரியபுராணத்தோடு,
சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆராய்ந்து அடிகளார் எழுதிய நூல்கள்,
சிலம்பு நெறி, கம்பன் கண்ட
ஆட்சியில் அரசியல் சமூகம், ஆகியனவாகும்.
சங்க, சமய இலக்கியங்களோடு நின்றுவிடாமல்
சமகால இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமையுடைய அடிகளார்,
‘பாரதி யுக சந்தி’, ‘பாரதிதாசனின் உலகம்’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
அவர்தம் சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக
மக்களைச் சென்றெய்தியது. அதுபோல் அடிகளார் அரங்கத்தலைமையேற்றுப்
பாடிய கவிதைகள், ‘கவியரங்கில் அடிகளார்’ என்னும் நூலாகியிருக்கிறது. அவர்தம்
சுயசரிதையென அமைவது, ‘மண்ணும் மனிதர்களும்’ எனும் நூலாகும். சில நாடகங்களும் அடிகளாரால்
எழுதப்பெற்று அரங்கேற்றம் ஆகியிருக்கின்றன. சிறுபொழுதும் ஓய்வின்றி, உலக நலனுக்காகத் துடித்த
அடிகளாரின் இதயம் 1995ஆம் ஆண்டு ஏப்ரல்
15ஆம் தேதி தமது துடிப்பை
நிறுத்திக்கொண்டது. ஆயினும் அவர் ஆற்றிய
அருட்பணிகள், தொடங்கிய தூய இயக்கங்கள்
இன்னும் தொடர்ந்து விரிந்து வளர்கின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக