சுப்ரமணிய பாரதியார் (SUBRAMANIA BHARATHIAR)
பெயர் :
சுப்ரமணிய பாரதியார்
இயற்பெயர்
: சுப்பிரமணியன், சுப்பையா
பிறப்பு
: 11-12-1882
இறப்பு
: 12-09-1921
பெற்றோர்
: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
இடம் : எட்டயபுரம்,தூத்துக்குடி, தமிழ்நாடு
புத்தகங்கள்
: குயில் பாட்டு, கண்ணன் பாட்டு,
சுயசரிதை (பாரதியார்), தேசிய கீதங்கள், பாரதி
அறுபத்தாறு, ஞானப் பாடல்கள், தோத்திரப்
பாடல்கள், விடுதலைப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதியார்
பகவத் கீதை (பேருரை), பதஞ்சலியோக
சூத்திரம், நவதந்திரக்கதைகள், உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கம்,
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்),
சின்னஞ்சிறு கிளியே, ஞான ரதம்,
பகவத் கீதை, சந்திரிகையின் கதை,
பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி,
பொன் வால் நரி ஆறில்
ஒரு பங்கு
வகித்த பதவி : கவிஞர், எழுத்தாளர்,
விடுதலை போராட்ட வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
சின்னசுவாமி
சுப்பிரமணிய பாரதி, ஒரு கவிஞர்,
எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும்
சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார்
என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும்
சிறப்பான புலமை கொண்டு, நவீனத்
தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன்,
இந்திய விடுதலை, பெண் விடுதலை,
சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள்
குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக
மக்கள் மனதில் விடுதலை உணர்வை
ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர்
இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற
பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில
அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை
ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதி, இந்திய வரலாற்றின்
திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
பால கங்காதர திலகர், உ.
வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம்
பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர்
இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின்
மாணவியான சகோதரி நிவேதிதையை தமது
குருவாகக் கருதினார்.
பிறப்பு,
ஆரம்பகால வாழ்க்கை:
சின்னசாமி
ஐயர், இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு
டிசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பாரதியார்
பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன்
என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள்
மறைந்தார். அதனால், பாரதியார் அவரது
பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து
வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை
வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை
மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில்
ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.
இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில்
பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை
விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி
இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால்
அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி
வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல்
இருந்த பின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில்
பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில்
வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு
காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கியப்
பணி:
தம் தாய்மொழி தமிழின் மீது
அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் ‘யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்‘ எனக் கவிபுனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில்
தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.
பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு
கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ
சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று
அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற
முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை
அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த
கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும்,
அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு
என்றும் பலர் கருதுகின்றனர்.
பாஞ்சாலி
சபதம்:
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை
பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான்
பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய
நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும்
கொண்ட தமிழின் அழியாக் காவியமாக
பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை
தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி
சபதம் இரு பாகங்கள் உடையது.
இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல்
சருக்கம், சபதச் சருக்கம் என
ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
இதழியல்
பணியும் விடுதலைப் போராட்டமும்:
பாரதியார்,
முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்டு 1906 வரை
சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு
தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்டு 1920 முதல் செப்டம்பர் 1920 வரை
அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி
மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத
இதழிலிலும், இந்தியா என்ற வார
இதழிலிலும், சூரியோதயம், கர்மயோகி, தர்மம் என்ற இதழ்களிலும்
பாலபாரத யங் இண்டியா என்ற
ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட
பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்:
பாரதியாரின்
பாடல்களை பிரிட்டீஷ் ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த
பர்மா மாகாண அரசு தடைசெய்தது.
இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல்
துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
சென்னை மாகாணச் சட்ட அவையில்
விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர்
8, 9 தேதிகளில் நடந்தது. தீரர் சத்திய
மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில்
இலக்கியம் சார்ந்த பல கருத்துகள்
பதிவாகின.
தேசியக்
கவி:
எட்டயபுரத்தில்
பாரதி பிறந்த வீடு தற்போது
தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள்
பார்வைக்கு விடப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு
கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த
காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப்
போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள்
மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள்
ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது
வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய
தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி
அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும்
பெற்றவர். ‘வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத்
தாயை வணங்குதும் என்போம்’ என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில்
செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும்
நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை
விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
‘ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோம்’ விடுதலைக்கு
முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு
முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப்
புலவன்:
பாட்டுக்கொரு
புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக்
கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த
கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல்,
பொருள்கொள், யாப்பு, அணி என
இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும்
கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த
பாரதி, புதுக் கவிதை எனப்
புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக்
கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு
முதலில் தந்த பெருமை பாரதியையே
சாரும்.
பெண்ணுரிமைப்
போராளி:
பெண்ணடிமை
தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல்
முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார்.
‘போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப்
பல்லாயிரம் போற்றிகான்’ என்ற பாரதி பெண்மை
வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காக
சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி,
சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச்
சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று
கண்டார்.
மறைவு:
1921 ஆம்
ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால்
நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட
சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு
நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921இல் செப்டம்பர் 12 அதிகாலை
01:30 மணிக்கு காலமானார். அவர் கடைசி நாட்களைக்
கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.
பாரதியார்
நினைவுச் சின்னங்கள் :
தமிழ்நாடு
அரசு மகாகவி பாரதியார் நினைவினைப்
போற்றும் வகையில் பாரதியார் நினைவுச்
சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம்,
சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம்,
புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம்
ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி
வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில்
பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில்
பாரதியின் ஏழு அடி உயரச்
சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில
முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு
பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான
புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக