வாண்டாயத் தேவன் (VANADAYA THEVAN)
பெயர்
: வாண்டாயத் தேவன்
இடம்
: சிவகங்கை, இராமநாதபுரம், தமிழ்நாடு
வகித்த
பதவி : அரசர், விடுதலைப் போராட்ட
வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
கொல்லங்
கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர்
வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து
பூலித்தேவர் போரிட்ட காலத்தில்,நெல்கட்டுஞ்செவலுக்கு
அருகில் உள்ள பாளையக்காரரான இவர்
பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
முதற்போர்:
இவர்
பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள்.
ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின்
கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது.
அந்த படையை மேஜர் பிளின்ட்
மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற
பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.
1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு
தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன்
எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள்
முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர்.
பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை
அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை
வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே
பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான்.
மேலும் அதில் ஐந்து முக்கிய
பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை
பின் வாங்கியது. இரண்டாம் போர்:
1767ல் மீண்டும்
பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட்
கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது.
இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும்
வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது
வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக
இருந்தார். போர் நடைபெறும் போது
ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது
வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை
வரலாம். எனவே, தன் குல
வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும்
தன் மனைவியை, அரண்மனையில் இருந்து
வெளியேற்றி விட வேண்டும் என்று
வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால்
தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய
ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய
வழி ஒன்றின் மூலம் அரண்மனையை
விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த
நாள் காலையில் போர் உக்கிரமாக
நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.
வாழ்க்கை:
இரவோடு,
இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத்
தேவனின் மனைவி, தன் நாட்டின்
எல்லையில் உள்ள ஒரு ஊரில்
போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார்.
எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த
யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும்,
அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன்
மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை
வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண்
மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர்
மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து
வந்தார்கள். அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு
பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட
நாச்சியார், காலம் செய்த கோலத்தால்
வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப்
பதாரி போல், ஏழை, எளிய
மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால்,
பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி
என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த
தகவலாளர் ஒருவர் கூறினார்.
இவரது
மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது.
இவர் சிறிய வயதிலேயே அக்கிராம
மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார்.
அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன்
என ஊர் மக்கள்
கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும்
எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும்
என்றிருந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த
கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை
காலி செய்து விட்டு வேறொரு
ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது.
அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்
என்பது தெரியவில்லை.
கொல்லங்கொண்டான்
பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில்
இடர் தீர்த்த பெருமாள் கோயில்
உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற
இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத்
தேவன். ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில்,
வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து
கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன
மங்கையர்களை வாண்டாயத் தேவன் அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும்
அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல்
பணியையும் ஒன்றுசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை
(குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக்
கொடுத்துள்ளார். வாண்டாயத் தேவர் கொடுத்த அக்குளங்கள்
இன்றும் குயிலாள் குளம், மயிலாள்
குளம் என்று அவ்வூர் மக்களால்
அழைக்கப்படுகின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக