விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ₹5000' - அரசின் புதிய அறிவிப்பு என்ன சொல்கிறது?
*பொதுவாக, சாலையோரத்தில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க, சில காரணங்களுக்காக பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கி பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.*
*அதன்படி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்குக் கொண்டு வந்து சேர்த்து உதவிபுரியும் நபரை ஊக்குவிக்கும் வகையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மக்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.*
*இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தமிழக அரசும் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், `ஒரு விபத்து நடந்த பின்னர் துளியும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டிய, உயிர் காக்கும் பொன்னான நேரத்தில் (Golden Hour), சாலை விபத்தில் பாதிக்கப்பட்டரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.*
*இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் உதவியினை மக்கள் செய்திட வேண்டும் என்பதே. ஓர் ஆண்டில் 5 முறை வரை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலைகளில் விபத்து நடந்ததையொட்டி அவ்விடத்தை காவல்துறையினர் பார்வையிட்ட பின்னர், விபத்தின் காரணம் மற்றும் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் தகவல் தெரிவிப்பார். சாலையோர விபத்துகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் பணிபுரியும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழுவிற்கு அனுப்பப்படும்.*
*அக்குழு ஆய்வு செய்து விபத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு, உதவி செய்த நபருக்கு ரூ.5000 பரிசுத் தொகை வழங்குவதற்காகப் போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது./*
*இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை அடுத்து, இனி மக்கள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு தயக்கம், சுணக்கம் காட்டமாட்டார்கள் என நம்பப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.*
கருத்துகள்
கருத்துரையிடுக